யானை மனித மோதல்கள் எப்போது முடிவுக்கு வரும்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, March 26th, 2019

யானை – மனித மோதல்கள் மற்றும் உயிரிழப்புகள் என்ற விடயமும் தற்போது இந்த நாட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த 2016ஆம் ஆண்டு 279 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், 68 பேர் யானைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

2017ஆம் ஆண்டில் 256 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், யானைத் தாக்குதல்கள் காரணமாக 87 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிய வருகின்றது. கடந்த 2018ஆம் ஆண்டைப் பொறுத்தமட்டில் சுமார் 311 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி 95 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிய வருகின்றது.

கிழக்கு மாகாணத்திலே மிக அதிகளவிலான யானை – மனிதர் மோதல்கள் அம்பாறை மாவட்டத்திலே இடம்பெற்று வருகின்றது. அதேபோன்று ஏனைய மாவட்டங்களிலும் மேற்படி வாய்ப்புகள் குறைவு எனவும் கூற முடியாது. அதேநேரம், வடக்கு மாகாணத்திலே குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற  மாவட்டங்களிலே யானைகள் – மனித மோதல்கள் காரணமாக எமது மக்கள் கடந்த யுத்த காலத்தைவிட மிக மோசமான அச்ச நிலைமைக்குள்ளேயே வாழ்ந்து வர வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலே கண்டாவளை பிரதேசத்தில் கல்மடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்து தங்களை தற்பாதுகாத்துக் கொள்வதற்கு சுமார் 6 கிலோ மீற்றர் தூரத்திற்கு மின் வேலி அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஐயன்குளம் கிராமத்தில் பல மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருந்த யானை பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு, மூன்றே மாதக் காலப் பகுதிக்குள் அது சேதமாகிவிட்டதால், மீண்டும் காட்டு யானைகளின் தொல்லைகள் தாங்க இயலாதுள்ளதாக அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள கிண்ணையடி கிராம மக்கள் காட்டு யானைகள் தொல்லை காரணமாக இரவில் தூங்காமல் விழித்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இப்படியே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பிற்பட்ட காலத்தில் எமது மக்கள் வாழ்வதற்காக மனிதர்களுடனும், விலங்குகளுடனும்  போராடி வர வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த காட்டு யானைகள் – மனிதர்கள் மோதல் தொடர்பில் ஒரு நிலையான தீர்வினை எட்ட வேண்டிய நிலைக்கு இந்த நாடு தள்ளப்பட்டுள்ளது. இதற்கொரு நிரந்தரத் தீர்வாக பனை மரங்களை நடுவதன் மூலமாக வேலிகளை அமைத்து இப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். இது ஒரு சிறந்த பாதுகாப்பு முறை என்பதுடன், யானைகளுக்குத் உணவாகவும், மக்களுக்கு பொருளாதார ஈட்டல்களை மேற்கொள்ளக்கூடியதாகவும்; இருக்கின்ற ஒரு திட்டமாகும்.

அதேநேரம், தற்போது தேனீக்கள் வளர்ப்பதன் ஊடாக இத்தகைய காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப்; பெறலாம் என்றும் கூறப்படுகின்றது. எனவே, உரிய நிரந்தர ஏற்பாடொன்று தொடர்பில் ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவிடுகின்றேன்.

Related posts:


அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத்தாருங்கள் - டக்ளஸ் எம்பியிடம் மன்னார் நடுக்குடா பகுதி மக்கள்...
நிரந்தர நியமனம் தான் கிடைக்காது போனாலும் எமது சேவைக்கு ஏற்ற ஊதியத்தையாவது அதிகரித்துத் தாருங்கள்- அம...
கிளிநொச்சி மாவட்டதில் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் திட்டத்திற்காக கோரப்பட்ட காணிகள் தொடர்பில் அமைச்ச...