தமிழர்களின் அவலத்தில் சுய லாப அரசியல் நடத்தியவர்களே துரோகிகள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, September 8th, 2018

மத்திய அரசில் பங்கெடுத்து இணக்க அரசியல் வழிமுறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அன்று உயிரைப் பணயம் வைத்து செயற்பட்டிருக்காவிட்டால், பிற்போக்குத் தமிழ்த் தலைமைகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் படுகுழியில் தள்ளியிருப்பார்கள். தமிழ் மக்களை ஆயுதம் ஏந்திய கொலைக்கரங்களிடமிருந்தும், பட்டினிச்சாவிலிருந்தும் எமது யதார்த்த அரசியல் அணுகுமுறையூடாகவே இயன்றவரை பாதுகாத்திருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

யுத்தம் அழித்த தமிழர் தாயகத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கின்றோம். அரசியல் தீர்வும், அன்றாடப்பிரச்சனைக்குத் தீர்வும், அபிவிருத்தியும் தாயகப் பிரதேசமெங்கும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே முன்னின்று உழைத்தது.

தமிழ் மக்களை கொலைக் களம் நோக்கி இழுத்துச் சென்றவர்களும், உசுப்பேற்றியவர்களும், துதிபாடிக்கொண்டு அதற்கு துணைபோனவர்களும் தமிழ் மக்களின் அழிவில் சுயலாப அரசியல் நடத்தியவர்களும், இன்றும் சுயலாப அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களும் தான் தமிழ் இனத்தின் துரோகிகள்.

சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் தமிழர் நிலங்களை பாதுகாப்பு காரணங்கள் கூறி அன்று சுவிகரிக்க முற்பட்டபோது, அதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் இருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒன்பது உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்து எதிர்த்து அந்த சுவிகரிப்பை தடுத்து நிறுத்தியிருந்தோம். அன்று தடுத்திருக்காவிட்டால், இன்று சுவிகரிக்கப்பட்ட காணிகளை மீளப்பெறும் உரிமையையும் தமிழ் மக்கள் இழந்திருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் சந்திரிக்கா அம்மையார் கொண்டுவந்த அற்புதமான அந்த அரசியல் தீர்வுத்திட்டத்தை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கச் செய்வதில் பக்கபலமாக இருந்து உழைத்தவர்கள் ஈ.பி.டி.பியினர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் மாகாணசபைகளின் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்களே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அன்று இருந்தபோதும், எமது அனுபவம் நிறைந்த அணுகுமுறை காரணமாக ஆளும்கட்சியின் ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு ஆட்சியாளர்களின் அந்த முயற்சியை தடுத்து நிறுத்தியிருந்தோம்.

எமது இணக்க அரசியல் வழிமுறையில் அன்று அமைக்கப்பட்ட இடைத் தங்கள் முகாம்களிலிருந்த ஆயிரக்கணக்கான மக்களை மீள் குடியேற்றம் செய்ததும், ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்களை எமது இளைய தலைமுறையினரக்குப் பெற்றுக்கொடுத்ததும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தை துரிதப்படுத்தியதும், வடகடல் நிறுவனத்தை பாதுகாத்து பலப்படுத்தியதும், நொருங்கிக் கிடந்த பனை ஆராய்ச்சி மையத்தை படையினரிடமிருந்து மீளப்பெற்று மீள் எழுச்சியோடு புனரமைத்ததும், படையினர் வசமிருந்த கிளிநொச்சி அறிவியல் நகரை மீளப்பெற்று அங்கு பொறியியல் பீடமும், விவசாய பீடமும் அமையப்பெறுவதற்கு பாடுபட்டதும், இந்திய அரசிடமிருந்து 50 ஆயிரம் வீடுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததும், கலாசார மண்டபம் 150 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து அதைப் பெற்றுக்கொண்டோம். யாழ். தேவியை வடக்கு நோக்கி வரச் செய்வதற்கு வழிவகை செய்ததும், இன்னும் இதுபோன்ற பல பணிகளை நாம் செய்து முடித்ததும் எமது உழைப்பின் வரப்பிரசாதங்கள்தான்.

அவற்றை நாம் செய்யும்போது எம்மை “துரோகி” என்றார்கள். அரசின் “கைக்கூலிகள்| என்றார்கள். பல அவப்பெயர்களை எம்மீது சுமத்தினார்கள். அவை எவற்றையும் நாம் கவனத்தில் கொள்ளவில்லை. எமது பாதையில் மக்களுக்கு அழிவில்லை. எவரும் இரத்தம் சிந்தத் தேவையில்லை உழைப்பதற்காக வியர்வை சிந்துங்கள் என்றே நாம் போதித்தோம்.

அரசியல் உரிமைகள் பெற்று சமத்துவத்துடன் இலங்கையில் – எமது தாயகப் பிரதேசத்தில் தமிழர்கள் தலைநிமிர்த்தி வாழ்வதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் அணி திரண்டு வாருங்கள் என்றுதான் நாம் வழி காட்டி வருகின்றோம்.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து கட்டங்கட்டமாக நாம் முன்னகர்வதனூடாகவே தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்கை அடைந்து கொள்ளமுடியும் என்று நாம் கூறிவரும் யதார்த்தமே இன்று நிதர்சனமாகி வருகின்றது. நாம்; காட்டிய அரசியல் பாதையே சரியென்பதை வரலாறு நிதர்சனமாகி வருகின்றது. என்றால், எம்மை தூற்றியவர்களும், துரோகி என்றவர்களும் இன்று நாடாளுமன்றத்தில் எதையும் சாதிக்க முடியாத நடைப் பிணங்களாகவும், மாகாணசபையை செயற்திறனோடு நிர்வகிக்கத் தெரியாத அறிக்கைச் சூனியங்களாகவும் காலத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்கள்.

இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்கள் எமது கரங்களில் அரசியல் அதிகாரத்தை வழங்குவார்கள் என்ற நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:


ஆட்சி மாற்றங்களை உருவாக்குவதில் இருக்கின்ற அக்கறை தமிழ் மக்களின் அரசியலுரிமை விடயத்திலும் இருக்க வேண...
தொழிலுக்கான தடையை நீக்கித் தாருங்கள் - முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!
கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கல...