சைவத்திற்கும் தமிழுக்கும் வாழ்நாள் முழுவதும் பெரும் தொண்டாற்றிய பெருமகனார் சிற்சபேசக் குருக்கள் அனுதாபச்  செய்தியில் – டக்ளஸ் தேவானந்தா.

Tuesday, August 16th, 2016

சைவத்திற்கும் தமிழுக்கும் வாழ்நாள் முழுவதும் பெரும் தொண்டாற்றிய பெருமகனார் சிற்சபேசக்குருக்களின் இழப்பென்பது ஈடுசெய்யமுடியாத பேரிழப்பென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காலம் சென்ற பாலசுப்பிரமணியம் ஐயர் சிற்சபேசக் குருக்களின் மறைவையொட்டி விடுத்துள்ள அனுதாப செய்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்தள்ளதாவது –

பாலசுப்ரமணியக் குருக்கள் எனது நீண்டகாலமான நண்பர் என்பதற்கு அப்பால் பல வேளைகளிலும் எனக்கு ஆலோசனைகளையும் ஒத்தாசைகளையும் நல்கிவந்தவர்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளில் கொழும்பில் இருந்தபடி பல்வேறு இடர்பாடுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் சைவத்தையும் தமிழ் மொழியையும் வளர்ப்பதில் அவர் பாரிய பங்களிப்புகளை ஆற்றியுள்ளார் என்பதை நான்  நன்கறிவேன்.

அது மட்டுமல்லாது நான் முன்னர் இந்துகலாசார அமைச்சராக இருந்தபோது தனிப்பட்டரீதியாகவும் அமைச்சர் என்றவகையிலும் எனக்கு உறுதுணையாக இருந்து பல வழிகளில் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் தந்திருந்தார்.

இந்நாட்டில் குறிப்பாக கொழும்பில் மட்டுமல்லாது நாடளாவியரீதியில் இந்து சமய வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றியிருந்த சிற்சபேசக்குருக்கள் காலமான செய்தி அறிந்து பேரதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றேன்.

இந்தவகையில் பெருமகனாரின் இழப்பு என்பது சைவத்தையும் தமிழையும் நேசிக்கின்ற அனைத்து நல் உள்ளங்களினாலும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு என்பதுடன் அன்னாரின் பிரிவின் துயரிலும் நான் பங்கெடுத்துக் கொள்ளும் அதேவேளை அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றேன் என அவர்விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: