நாம் செய்த பணிகளுக்கு பனை ஆராய்ச்சி நிலையமும் சாட்சி சொல்லும்! -டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, June 7th, 2016

கைதடியில் அமையப் பெற்றுள்ள பனை ஆராய்ச்சி நிலையம் கம்பீரத்துடனும், புதுப் பொலிவுடனும் தோற்றம் பெற்றுள்ள நிலையில் இன்று பார்ப்பவர்களுக்கு ஆகாயத்திலிருந்து வந்து நிலை கொண்டிருப்பதாகத் தெரிந்தால் அது யாருடைய தவறு? என தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

இது தொடர்பாக அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது –

கடந்த காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட அரசியல் முயற்சிகளினால் செய்துமுடிக்கப்பட்ட மக்கள் நலன்சார்ந்த பணிகளில் அதுவும் ஒன்றாகும். நாடு தழுவிய ரீதியில் சுமார் 11.12 மில்லியன் பனை மரங்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற புள்ளிவிபரங்கள் ஊடாக அறியமுடிகின்றது.

அதில் பெருந்தொகையான யாழ்ப்பாண மாவட்டத்தில் 3.5மில்லியன் பனை மரங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3.5 மில்லியன் பனை மரங்களும் இருப்பதாகவும் ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது.

அடியிலிருந்து நுனிவரை பயன்மிகுந்த கற்பகத்தருவினை பேணிப் பாதுகாப்பதற்கும், மேலும் வளர்த்தெடுப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான செயற்பாடுகள் அவசியம் என்பதை முன்னிறுத்திச் செயற்பட்டவர்களில் எனது வளர்ப்புத் தந்தையும், தொழிற்சங்கப் போராளியுமான கே.சி. நித்தியானந்தா அவர்களை வரலாறு ஒருபோதும் மறந்துவிடாது.

1978ஆம் ஆண்டு பனை அபிவிருத்திச் சபையின் முதல் தலைவராக கே.சி. நித்தியானந்தா அவர்கள் அர்ப்பணிப்போடு சேவை செய்திருக்கின்றார். சிறப்பாக எழுச்சிபெற்று வந்த பனை அபிவிருத்திச் சபையின் தேவைப்பாடுகள், பனைசார்ந்த ஆய்வுகளுக்கான அவசியங்கள், உற்பத்திப் பொருட்களின் தரம், என்பவற்றை நிர்ணயிப்பதற்கும் பனை தொடர்பான ஆராய்ச்சி நிலையம் ஒன்று வடமாகாணத்தில் அமையப் பெறுவதன் அவசியம் உணரப்பட்டது.

அதனடிப்படையில் யு.என்.டி.பியின் நிதி உதவியுடன் 1986ஆம் ஆண்டு கைதடியில் பனை ஆராய்ச்சி நிலையம் தோற்றுவிக்கப்பட்ட போது முழுமையான செயற்பாட்டைக் கொண்டிருக்காவிட்டாலும், பனை அபிவிருத்திச் சபையின் தேவைகளுக்கான ஒரு வடிகாலாக ஆராய்ச்சி நிலையம் அமைந்திருந்த பனை ஆராய்ச்சி நிலையம் 1995ஆண்டு யுத்த அழிவுகளுக்கு இலக்காகி இருந்தது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் கைதடியில் நொருங்கிக் கிடக்கும் பனை ஆராய்ச்சி நிலையத்தின் தோற்றம் பார்ப்பவர்களுக்கு வேதனையையும், கவலையையும் உறுத்தலையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

எப்படியாவது பனை ஆராய்ச்சி நிலையத்தை மீளக்கட்டி எழுப்பி நொருங்கிக் கிடக்கும் வரலாற்றை புதிதாய் எழுதவேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டேன். அதற்கமைவாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக நான் இருந்ததால் எனது தீர்மானத்தை நிறைவேற்ற அது பெரும் வாய்ப்பாக இருக்குமென்று நம்பினேன்.

எனது முயற்சிகளுக்கு பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக இருந்தவர்களில் ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள தலைவரான எஸ்.சிவதாசன் மற்றும் பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவரான பசுபதி சீவரெட்ணம் (தோழர். கி.பி) ஆகியோர் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள் என்பதையும் குறிப்பிடுவது அவசியமாகும்.

இந்திய அரசாங்கத்திடம் எமது மக்கள் நலன்சார்ந்து என்னால் முன்வைக்கப்பட்ட பல உதவித்திட்டங்களில் ஒன்றாகவே பனை ஆராய்ச்சி நிலையத்தையும் புனரமைக்க வேண்டியதன் அவசியத்தை கோரிக்கையாக முன்வைத்திருந்தேன்.

எனது கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் 70 மில்லியன் ரூபா செலவில் ஆராய்ச்சி நிலையத்திற்கு தேவையான நவீன இயந்திரங்களையும், உபகரணங்களையும், வாகன வசதிகளையும், தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்குவதற்கும், கட்டிடத்தை புனரமைக்கவும் இந்திய அரசு முன்வந்தது.

அதற்காக மீண்டுமொருமுறை இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் தமிழ் மக்கள் சார்பில் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தியாவின் அந்த பங்களிப்பானது எனது முயற்சிக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது. அப்போதைய இலங்கை அரசிடம் பனை ஆராய்ச்சி நிலையத்தை நவீன வசதிகளை உள்ளடக்கிய வகையில் புனரமைக்க வேண்டுமென்றும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்.

அரசும் எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இதற்கென 21 மில்லியன் ரூபாவை கட்டுமானப் பணிகளுக்கென வழங்கியது.

இலங்கை, இந்திய அரசுகள் இணைந்து வழங்கிய உதவிகளுடன் 17 வருடங்களாக நொருங்கிக் கிடந்த பனை ஆராய்ச்சி நிலையத்தை புனரமைத்து கட்டியெழுப்பி, 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி திறந்து வைத்தேன்.

அத்துடன் புனரமைப்புக்கு கிடைக்கப்பெற்ற நிதியில் எஞ்சிய பணத்தை செலவு செய்து பனை ஆராய்ச்சி நிலையத்தின் அருகில் தங்கும் விடுதியும், கருத்தரங்கு மண்டபம் ஒன்றையும் கட்டியெழுப்பப்பட்டது.

புத்துயிர் பெற்றிருக்கும் பனை ஆராய்ச்சி நிலையத்தில், பனை உற்பத்திப் பொருட்களின் தர நிர்ணயத்தை உறுதிப்படுத்த முடிகின்றது.

பனை உற்பத்திகளின் போசனைகள் தொடர்பான பகுப்பாய்வுகளை செய்ய முடிகின்றது. பனை உற்பத்திப் பொருகளின் மருத்துவ ரீதியான முக்கியத்துவத்தை வெளிக்கொண்டுவர முடிகின்றது.

பனை உற்பத்திகளிலிருந்து புதிய உணவுகளை உற்பத்தி செய்வதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. பனை உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடிய தரத்துக்கு தயாரிப்பது தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளமுடிகின்றது.

பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புதிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடிக்க முயற்சிக்கப்படுகின்றது. பனை உற்பத்திகளுடன் தங்கி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தொழில் நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் பனை ஆராய்ச்சி நிலையத்தினூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது என்ன செய்தீர்கள் என்று கேட்கும் அன்பர்களுக்கு, நொருங்கிக் கிடந்து காட்சிதந்த பனை ஆராய்ச்சி நிலையமும் இன்று சாட்சியாக பதில் சொல்லும் என பதிவிடப்பட்டுள்ளது.

13336070_1753672738240926_1551187104989600688_n

13332807_1753672841574249_7085255248827995972_n

13342862_1753672718240928_4436197913225634012_n

13315643_1753672811574252_254725612898632237_n

13394030_1753672768240923_8033021905919444478_n

Related posts: