களுத்துறை சிறை தாக்குதலில்  நான் ஒரு கண்பார்வையை இழந்தேன் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!

Thursday, September 7th, 2017

எனது தன் நம்பிக்கையும், நான் தப்பிப் பிழைக்க வேண்டும் என்று எமது மக்கள் எனக்காக செய்த பிராத்தனையும், வைத்தியவர்களின் அக்கறை மிகுந்த வைத்தியமும் என்னைக் காப்பாற்றியது. என்னை நாகொட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்த சிங்கள மொழி பேசுகின்ற நிபுணத்துவ வைத்தியர்களும், தாதியர்களும், ஏனைய ஊழியர்களும், என் மீது கரிசனை காட்டி அளித்த சிறந்த சிகிச்சையினால் எனக்கு இந்தச் சபையில் பேசுகின்ற பாக்கியம் கிடைத்திருக்கின்றது. அவர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூற விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழ் 02 ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

2017.02.17ஆம் திகதிய இல. 2006/45 உடைய அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலின் படி இவ் ஒழுங்கு விதிகள் 2017ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க மருத்துவ உபகரணங்கள் விலை குறித்தல் ஒழுங்கு விதிகளாக நான் இங்கு குறிப்பிட்ட வர்த்தமானியில் கௌரவ அமைச்சர் பிரசுரித்துள்ளார்.

இவ் வர்த்தமானியின் பிரகாரம், கண்வில்லைகள்ஃ டெலிவெரி சிஸ்டத்துடன் கூடிய வில்லைகள் தொடர்பாக முப்பத்தி எட்டு (38) வணிகப் பெயர்அங்கிகரிக்கப்பட்ட பெயர் மற்றும் உற்பத்தியாளர்களின் விபரத்துடன் அதிகூடிய சில்லறை விலையும் விற்கும் போது தெளிவான பற்றுச்சீட்டு ஒன்று வழங்குதல் வேண்டும் என்றும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இவ் ஒழுங்குவிதிகளை நான் வரவேற்கின்றேன். ஆனால் டெலிவெரி சிஸ்டத்துடன் கூடிய வில்லை ஒன்றின் அதிகூடிய விலை ரூபா பதினேழாயிரம் (17,000) ஆகவும் சாதாரண வில்லை ஒன்றின் மிகக் குறைந்த விற்பனை விலை ரூபா ஆயிரத்து எண்ணூறு (1,800) ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இவ் வில்லைகள் அனைத்தினதும் தரக்கட்டுப்பாடு மிகவும் கடினமான முறையில் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். இத் தரக்கட்டுப் பாட்டினை அதிகார சபையினரும் அவ் அதிகார சபையின் ஊழியர்களும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் செய்கின்றார்களா? என்பதை அமைச்சர் அவர்கள் கட்டாயமாகக் கண்காணிக்க வேண்டும்.

கண்வில்லைகள் தொடர்பாக இச் சபையில் நான் பேசுகின்ற இச் சந்தர்ப்பத்தில் எனது தனிப்பட்ட அனுபவம் ஒன்றை இங்கு நினைவு கூறி பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். 1998ஆம் ஆண்டு தமது விடுதலையை வலியுறுத்தி சிறையில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த கைதிகளை சந்தித்து அவர்களுக்கு மனிதாபிமான உதவி செய்ய நான் களுத்துறைச் சிறைச்சாலைக்குச் சென்ற போது எதிர்பாராத விதமாக அங்கு என்னைக் கொலை செய்வதற்கு திட்டமிட்ட சில கைதிகள் என்னைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினார்கள். நான் தாக்குதலுக்கு உட்பட்டு கடுமையான காயத்திற்கு உள்ளானதுடன் எனது தலையில் ஏற்பட்ட காயத்தினால் கண் ஒன்றின் பார்வையையும் இழக்கும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டேன்.

அந்தத் தாக்குதல் சம்பவத்தில் எனது ஒரு கண்பார்வையை இழந்தேன். அந்தக் கண்ணில் இயற்கையாக சுரக்க வேண்டிய கண்ணீர் சுரக்காத காரணத்தினால், கடந்த 19 ஆண்டுகளாக எனது கண்களுக்கு செயற்கை கண்ணீரை விட்டு வருகின்றேன். ஆகையால் பார்வை பாதிக்கப்பட்டவர்களினதும், கண் சம்மந்தமான உபாதைக்கு ஆளானவர்களினதும் பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன்.

கண்பார்வைக்காகப் போராடும் இலட்சக்கணக்கான சாதாரண மக்கள் இந் நாட்டில் வாழுகின்றார்கள். எனவே அந்த மக்களின் பெயரால் அதிகார சபை ஊழியர்களிடம் நான் கேட்பது என்னவென்றால், சம்பளத்திற்காகவும், பணத்திற்காகவும் வேலை செய்வதை விடுத்து, ஏழை எளிய மக்களின் கண்பார்வையை உறுதிப்படுத்தும் வகையில் தரக்கட்டுப்பாடு செய்து கண் வில்லைகளையும், மருந்து வகைகளையும் அவர்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் உங்களது கடமையைச் செய்ய வேண்டும் என்றும் இதை கௌரவ அமைச்சர் அவர்கள் உறுதிப்படுத்தல் வேண்டும் என்றும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:

தேசிய நல்லிணக்கத்தைப் பாதிக்காதவகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும் -- டக்ளஸ் தேவானந்தா!
வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
மூத்த ஒலிபரப்பாளர் ஜோர்க்கிம் பெனான்டோவின் இழப்பு, எமது மக்கள் மத்தியிலான பல்துறை ஆளுமைகளுக்கான வெற்...

கிராம மட்டங்களில் கட்சியின் செயற்றிட்டங்களை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்புவோம் - டக்ளஸ் தேவானந்தா!
அமைச்சர் தேவானந்தாவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் ...
சமூக அக்கறையும் தொலை தூரப் பார்வையும் ஊடகங்களுக்கு இருக்க வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!