மக்களுக்காக தம்மை அர்ப்பணிப்பவர்களே மாற்றுத்தலைமைக்குத் தகுதியானவர்கள் – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, September 28th, 2017

இந்த மண்ணுக்கு இறக்குமதி செய்யப்படுபவர்களும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் மாற்றுத் தலைமையாக முடியாது. மக்களோடு வாழ்பவர்கள் மக்களின் உணர்வுகளைச் சுமப்பவர்களாலுமே சரியான தலைமைத்துவத்தை வழங்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சமூக முன்னோடி எம். சி. சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு நினைவுதினம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்பர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு நினைவுதின சிறப்பு இதழை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் உரையாற்றுகையில் –

எம்.சி  ஒரு விடுதலை போராட்ட முன்னோடி!… விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை  என மாக்சிச தத்துவத்தின் மூலவர்கள் சொன்னது போல்,… தோழர் எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் இன்று உயிருடன் இல்லாவிடினும் அவரது கருத்துக்களும் சிந்தனைகளும் இன்னமும் எம் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறன. இந்த உண்மைமையை ஒப்புவிக்கும் வகையிலேயே அவருக்கான இந்த நிகழ்வு இன்று நடந்து கொண்டிருக்கிறது. இதில் நானும் கலந்து கொள்ள  வாய்ப்பு கிடைத்தமைக்கு நான்  நன்றி கூறுகின்றேன்.

தோழர் எம். சி அவர்களை தனியே ஒரு சமூக விடுதலை போராளியாக மட்டும் நாம் பார்க்கவில்லை.அவர் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக ஒரு சமூக மாற்றத்தையே விரும்பிய புரட்சியாளனாக செயற்பட்டவர்.ஒட்டு மொத்த இலங்கை தழுவிய ஒரு புரட்சியின் மூலம் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கலாம் என அவர் உறுதியாக நம்பியிருந்தவர்.

அதற்காகவே அவர் இலங்கை கம்யூனிசக்கட்சியை தனது தலைமையாக ஏற்றுக்கொண்டு செயலாற்றியவர்.அவர் சார்ந்த கம்யூனிஸ் கட்சி ஒன்றே முதன் முதலில் தமிழ் பேசும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்திருந்தது.

அது மட்டுமன்று தமிழ் பேசும் மக்களுக்கு பிரதேச சுயாட்சி தேவை என்ற தீர்மானத்தையும் அவர்களே முதன் முதலில் எடுத்திருந்தார்கள்.நான் சிறு வயதில் இருந்தே இடதுசாரி சிந்தனைகளை நேசிக்க தொடங்கியவன்.எனது தந்தையார் திரு கதிரவேலு அவர்களும் தோழர் எம்.சி அவர்களுக்கு முன்பாகவே ஆரம்பகால இலங்கை கம்யூனிஸ் கட்சியின்  உறுப்பினர்களில் பிரதான ஒருவராக இருந்தவர்.

எனது பெரிய தந்தையும். வளர்ப்புத்தந்தையுமாகிய கே.சி, நித்தியானந்தா அவர்களும் இடது சாரி இயக்கம் சார்ந்ந்த ஒரு தொழிற்சங்க வாதியாக உழைத்தவர். எனது மாமனாராகிய தோழர் சிவதாசன் அவர்களும் இலங்கை கம்யூனிஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

இதன் காரணமாகவே இடது சாரி சிந்தனைகளும் புரட்சி குறித்த எண்ணக்கருக்களும் எனது ஆழ் மனதில் வேரூன்ற ஆரம்பித்திருந்தன.மாறாக நான் வெறும் உணர்ச்சி வேகத்தில் மட்டும் போராட்ட திசை நோக்கி எழுந்து வந்தவன் அல்ல.

தோழர் எம் சி அவர்கள் விரும்பியது போல் நானும் ஒட்டுமொத்த இலங்கை தழுவிய புரட்சி ஒன்றையே விரும்பிருந்தவன்.ஆனாலும்  ஒட்டு மொத்த இலங்கை தழுவிய ஆயுதப்போராட்டத்தை நடாத்த தென்னிலங்கையில் இருந்து எம்மோடு இணைந்து வர எவரும் அப்போது கை நீட்டியிருக்கவில்லை.

ஆகவேதான் நாம் அன்று ஒரு பகுதிப்புரட்சியில் இறங்கியிருந்தோம். தோழர் எம் சி அவர்கள் தமிழ் சமூகத்திலும் இலங்கை சமூகத்திலும் நிலவும் வர்க்க ஒடுக்கு முறையையும் சுரண்டலையும் எதிர்த்த வர்க்க போராட்டங்களிலும் தன்னை இணைத்து செயற்பட்டார் .

உலகளாவிய  ரீதியில் அவர் தன்னை சோசலிச முகாம்களோடு இணைத்துக்கொண்டவர். தோழர் பொன் கந்தையா அவர்களின் வெற்றிக்காக அவர் உழைத்தவர். தோழர் எம் சி அவர்கள் குறித்து சில மாற்றுக்கருத்துக்களும்

சிலரிடம் இருக்கலாம். அதையும் நாம் எமது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து சீர் தூக்கி பார்க்கிறோம். நாம் இன பேதங்களுக்கு எதிரானவார்கள். மத வாதங்களுக்கு எதிரானவர்கள்.சாதீய முரண்பாடுகளுக்கு எதிரானவர்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சங்க இலக்கிய புலவர் கணியன் பூங்குன்றனாரின் தத்துவத்தை நாம் ஏற்றுக்கொண்வர்கள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளின் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொண்டவர்கள். அரசியலில் சமவுரிமை!பொருளாதாரத்தில் பொதுவுடமை!! சமூகத்தில் சமத்துவம்!!!

என்ற மாக்சீச தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள். இவைகளை நாம் நடைமுறையிலும் மெய்ப்பித்து காட்டி வருபவர்கள். எமது ஈழமக்களின் விடுதலை உரிமைக்காகவும் சமூக சமத்துவத்திற்காகவும் ஆயதவழிமுறையிலும் ஜனநாயக அரசியல் வழிமுறையிலும் எம்மை முழுமையாக அர்ப்பணித்து அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து போராடி வருகின்றோம். எமது மக்களின் இழப்புக்களையும் துயரங்களையும் இரத்தமும் சதையுமாகக் பங்கெடுத்து மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மாற்றம் கண்டிருக்கும் அரசியல் சூழலில் மாற்றுத் தலைமை ஒன்றிற்காக விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு அதன் கூர்முனைகள் முறிந்து போய் உள்ளன. போராட்டத்தை வேடிக்கை பார்த்தவர்களும் பொழுதுபோக்காய் விமர்சித்தவர்களும் எமது மக்களுக்குத் தலைமைகளாக இருக்க முடியாது என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.

இந்த மண்ணுக்கு இறக்குமதி செய்யப்படுபவர்களும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் மாற்றுத் தலைமையாக முடியாது. மக்களோடு வாழ்பவர்கள் மக்களின் உணர்வுகளைச் சுமப்பவர்களாலுமே சரியான தலைமைத்துவத்தை வழங்க முடியும்.

நாம் இலங்கையர்கள் என்பதால் தமிழர்கள் என்ற அடையாளத்தையோ அன்றி தமிழர்கள் என்பதால் இலங்கையர்கள் என்ற அடையாளைத்தையோ ஒரு போதும் இழந்து விட முடியாது.இலங்கையர்களாக இருக்கின்ற அதே வேளை தாம் தமிழர்கள் எனற அடையாளத்தோடுமே எமது மக்கள் உரிமைகளோடு வாழ விரும்புகிறார்கள். நாம் ஒரு தேசிய இனம். இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களும் பூர்வீக குடிமக்களே.

ஆகவே நாம் எமது தேசிய இனத்தின் உரிமைக்காக யதார்த்த வழிமுறையில் நின்று குரல் எழுப்பியும் உழைத்தும் வருகின்றோம்.நாம் முன்னெடுக்கும் தமிழ் தேசியம் என்பது வெறும் தேர்தல் வெற்றிக்கான பிற்போக்கு தேசிய கோசமல்ல. நாம் முன்னெடுக்கும் தமிழ் தேசியம் என்பது அடைந்தே தீர  வேண்டிய முற்போக்கு தேசியமாகும்.

13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல் படுத்தி அதில் இருந்து கட்டம் கட்டமாக முன்னேறி எமது மக்களின் தேசிய அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதே எமது பிரதான இலக்காகும். வெறும் போலியான தமிழ் தேசிய வெற்றுக்கூச்சல்களே இன்று தமிழ் பேசும் மக்களின் உரிமைக்கு தடையாக இருந்து வருகின்றது.

தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்காக நாம் அன்று ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். அந்த வழிமுறை திசை மாறிப்போனதால் அரசியல் அதிகாரங்களைஎமது கையில் எடுப்பதன் ஊடாகவே அரசியல் சமூக பொருளாதார சமூக மாற்றங்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு நாம் உழைத்து வருகின்றோம். இவைகளை எமது அரசியல் பலத்திற்கு அளவாக செயலாற்றியும் நாம் காட்டியிருக்கின்றோம்.

புரட்சி குறித்த சிந்தனையில் இருந்த தோழர் எம் சி அவர்கள் அரசியல் அதிகாரங்களை கையில் எடுப்பதன் ஊடாக தான் நேசித்த மக்களுக்கு தொண்டாற்றியவர். கடந்த கால அரசியல் தலைமைகள் விட்ட தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொண்டு எமது புதிய வழிமுறை ஊடாக

சமத்துவ சமுதாயத்தை படைப்போம் என உறுதி கொள்வோம்!வாழ்க தோழர் எம் சி அவர்களின் நாமம். மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!!

22068853_1541245879247827_1389427169_o 22117873_1541246185914463_1243615979_o 22092875_1541246029247812_900293555_o 22070563_1541246052581143_1752925588_o 22092502_1541246279247787_513879989_o

Related posts: