இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத விவகாரத்திற்கு தீர்வு காண்பது தொடர்பில் யோசனை முன்வைத்துள்ளேன் – அமைச்சர் டக்ளஸ் !

Wednesday, March 31st, 2021

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய சட்ட விரோத செயற்பாடுகளை தீர்ப்பதற்கான யோசனையொன்றை இந்தியாவிடம் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை மீனவர்களும் இலங்கை வளங்களும் எந்த வகையிலும் பாதிக்காத வகையிலே இந்த திட்டத்தை முன்னெடுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து கூறுகையில் –

சில கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான நிபந்தனைகளின் கீழ் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் அனுமதிப் பத்திர நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க தான் யோசனை முன்வைத்ததாகவும் அவர் கூறுயுள்ளார்.

அத்துடன் இந்த அனுமதி பத்திர நடைமுறையானது, நாட்டு படகுகளுக்கு மாத்திரமே செலுப்படியாகும் எனவும் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போட்டம் ட்ரோலரிங் படகுகளுக்கு இந்த அனுமதி பத்திர நடைமுறை செலுப்படியாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர மேலும் பல யோசனைகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவற்றில் இந்த அனுமதி பத்திர நடைமுறை ஒரு யோசனை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்த யோசனையின் கீழ், இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் மாத்திரமே இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்க யோசித்துள்ளதாகவும் இந்த அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கை அரசாங்கத்திற்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் முழுமையான கட்டுப்பாடுகளின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்க யோசனையை தான் முன்வைத்ததாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை மீனவர்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையிலேயே இந்த திட்டத்தை முன்னெடுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இலங்கை இந்திய மீனவர் பிரச்னை தொடர்பில், இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் - நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் டக்ளஸ் தேவானந்தா ...
காலநிலைகூட எமது மக்களை கடனாளிகளாகவே ஆக்கிவிட்டுள்ளது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவருகின்றது கேபிள் டி.வி. உரிமையாளர்களின் அத்துமீறல்கள் – நாடாளுமன்றில் டக்...