இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய செயற்பாடாக மட்டும் பார்க்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Monday, September 20th, 2021

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்தில்தான்வடக்குக் கடற்றொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சிக்கல்களையும் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவை தொடர்பாக இந்தியத் தரப்பினருடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருவதுடன் பாதிப்புக்களுக்குப் பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றேன் என்றும் தெரிவித்துள்ள அவர் அதேநேரம் எமது கோரிக்கைகளில் இருக்கின்ற விடயங்களை இந்தியத் தரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனாலும் எமது கடற்றொழிலாளர்களையோ அல்லது என்னையோ திருப்திப்படுத்தும் வகையில் இன்னும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது கடல் வளங்களை அழிப்பதுடன் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை முழுமையாக நிறுத்துவதற்கான முயற்சிகளில் நான் மனம் சோரவில்லை என்பதை எமது கடற்றொழிலாளர்களுக்கு கூறவிரும்புகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயத்தில் கடற்றொழிலாளர்கள் என் மீது அதிருப்தியடைந்திருப்பதாக சொல்லப்படுகின்றது.. நான் கடற்றொழிலாளர்களின் ஆதங்கத்தினை புரிந்து கொள்ளுகின்றேன் – அவர்களின் உணர்வுகளை மதிக்கின்றேன். எமது கடற்றொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு விடயங்களை கையாள வேண்டும் என்ற எதிர்பார்ப்போடுதான், ஜனாதிபதியும் பிரதமரும் என்னிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றார்கள்.

நான் அமைச்சராக இருக்கின்ற போதிலும் சில கூட்டுப் பொறுப்புக்களும் வரையறைகளும் இருக்கின்றன என்பதையும் எமது கடற்றொழிலாளர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நான் நம்புகின்றேன்.

மேலும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் என்பது தனியே, கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடாக மாத்திரம் பார்க்க முடியாது. இவ்விடயத்தில் இரண்டு நாடுகள் சம்மந்தப்பட்டடிருக்கின்றன. மறுதரப்பிலே சம்மந்தப்பட்டிருப்பது,

இந்தப் பிராந்தியத்தில் பலம் பொருந்திய நாடாக இருக்கின்றது இந்தியா. இந்தப் பிராந்தியத்திலே கேந்திர முக்கியத்துவம் உள்ள அமைவிடத்தில் இருக்கின்ற சிறிய நாடாக இலங்கை இருக்கின்றது. எனவே இந்த விவகாரத்தினை இராஜதந்திர ரீதியாகவே கையாள வேண்டியிருக்கின்றது.

எமது தீர்மானங்கள் பூகோள அரசியல் போட்டியில் ஈடுபடுகின்ற தரப்புக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாத வகையில் எமது தீர்மானங்களும் செயற்பாடுகளும் அமைய வேண்டும்.

எனவேதான், ஏற்கனவே நான் கூறியது போன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளைப் பெற்று, இந்திய அரசுடன் கலந்துரையாடி இராஜதந்திர ரீதியாக இந்த விவகாரத்தினை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஈ.பி.டி.பியின் பெயரை அவதூறு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஊடகப்பிரிவு அறிவிப்பு!
நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அமைச்சரவை தீர்மானத்தை அமுல்ப்படுத்துங்கள் - பொலிஸ் மா அதிபருக்கு அமை...
நக்டா நிறுவனத்தின் தலைமையகத்துக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - செயற்பாடுகளின் விஸ்தரிப்பு தொடர்ப...

தரம் - 03 அதிபர் சேவை – உதவிக் கல்விப் பணிப்பாளர் விவகாரங்களுக்கு ஜனவரியில் தீர்வு - அமைச்சர் தேவாவ...
மூத்த தோழர் பண்டாவின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரிய...
கிராமங்கள் தோறும் விழிப்புக் குழு – கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஒர...