நிரந்தர விடியலின் சமாதான ஒளி வீசட்டும் – நத்தார் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா ! (வீடியோ இணைப்பு)

Sunday, December 24th, 2017

நிரந்தர விடியலின் சமாதான ஒளி வீசட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நத்தார்தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

உலகத்தின் ஒளியாக கருணை மைந்தன் யேசு பிரான் பிறப்பெடுத்த இத்தினத்தை உலகெங்கும் வாழும் மக்களுடன் இணைந்து எமது மக்களும் நத்தார் தினமாக நம்பிக்கையோடு கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார்கள்.

இந்த நத்தார் தினத்தை நாமும் எமது மக்களோடு இணைந்து மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்!

நான் என்றும் மக்களுடனேயே இருக்கின்றேன். நீடித்த துயர்களை எமது மக்கள் எதிர்கொண்ட போதும் நான் மக்களுடனேயே வாழ்ந்து இதை நிரூபித்துக்காட்டியவன்.

நாம் சொல்லும் கருத்துக்கள் சத்திய வாக்குகள் போன்றவை. அவை என்றும் தோற்பதில்லை. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நாம் கொண்டிருக்கும் கருத்துக்களும் அதற்கான வழிமுறைகளும் ஒரு போதும் ஒழிந்து போகாது.

எமது தீர்க்கதரிசனங்களும், நம்பிக்கைதரும் சாத்தியமான எமது வழிமுறைகளுமே இன்று வெல்லப்பட்டு வருகின்றன.

நிரந்தர சமாதானம், நீடித்த சமஉரிமை, வரலாறு எங்கும் துயரச் சுமைகளை சுமந்த எமது மக்களுக்கு ஒரு நியாயத் தீர்ப்பு…. இவைகளே எமது மக்களின் ஆழ் மன விருப்பங்கள்.

ஆனாலும் எமது மக்களின் விருப்பங்கள் யாவும் வெறும் கற்பாறைகளில் மட்டும் விதைக்கப்பட்ட விதைகளாகவே இருந்து வந்திருக்கின்றன.

நிரந்தர சமாதானத்தை நோக்கிய எமது மக்களின் விருப்பங்கள் யாவும் நிறைவேறாத கனவுகளாக முடங்கிப் போயிருக்கின்றன.

உங்களோடு நாமும் சேர்ந்து வருத்தப்பட்டு துயரச் சுமைகளைச் சுமந்தவர்கள். எத்தனை சவால்களை எதிர்கொண்டாலும் எங்கள் இலட்சியத்தை அடையும் கடும் பயணம் ஒரு போதும் நின்று விடாது.

சமாதானத்தை விரோதிப்பவர்கள் சாத்தான்களே. அவர்கள் உங்கள் உரிமை வாழ்வின் பெயரால் வேதம் ஓதுவார்கள். மறுபடி எமது மண்மீது இரத்த வடுக்களை சுமந்த வன்முறைக்கு தூபமிடுவார்கள்.

இரக்கமும் கருணையும் இல்லாத துயர வாழ்வொன்றை மறுபடியும் உங்கள் மீது திணிக்க விரும்புவார்கள்.

அவலங்கள் நடக்காத, அவலச்சாவுகளின் அழுகுரல்கள் கேட்காத, பஞ்சம், பசி, பட்டினி இல்லாத சுத்தமும் சுகாதாரமும் மிக்க  ஓர் புனித பூமியே எமது விருப்பம்.

இது எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமி. எமது சொந்த நிலங்களை இழந்து வாழும் துயர்கள் இல்லாத, எவரையும் எவரும் அடிமைகள் என்று கொள்ளாத புதியதொரு சமாதான இராட்சியத்தையே நாம் விரும்புகின்றோம்.

அதற்கு நாம் விசுவாசம் உள்ளவர்களாகவும், நீதிச்சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவும், சமாதானத்தின் திசை நோக்கி, சாத்தியமான வழிமுறையில் தொடர்ந்தும் உழைத்து நிமிர்வோம்.

தீமையை வெறுத்து நன்மையை விரும்பி நியாயத்தை நிலைப்படுத்த முன்வாருங்கள்!

நீங்கள் உண்மையானவர்களை விசுவாசித்தால் நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரும்.

தவறான பாதையை நீங்கள் தெரிவு செய்வது சிங்கத்திடமிருந்து தப்பியவனுக்கு கரடி எதிர்ப்பட்டது போல்,

அல்லது வீட்டுக்குள் வந்து சுவரின் மேல் கையை வைத்தவனுக்கு  பாம்பு கடித்தது போலவே இருக்கும்.

ஆகவே இனிவரும் காலம் நல்ல கனிதரும் காலமாக மாறிவர நாம் தொடர்ந்தும் மாற்றத்திற்காக உழைப்போம்.

சமாதானத்தின் வடிவாக கருணை மைந்தன் யேசு பிரான் பிறந்த இத்தினத்தில்,…

எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும்,..

உங்கள் இல்லங்களின் வாசல்தோறும்,….

நிரந்தர விடியலின் சமாதான ஒளி வீசவும்,..

சமவுரிமை மலரவும் நாம் உழைப்போம் என உறுதி கொண்டு எழுவோம்.

உங்கள் அனைவருக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள்!

அன்பும் கருணையும் அவனி முழுவதையும் ஆழட்டும்!

Related posts:

துணைவியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறு...
தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு மகஜன எக்சத் பெரமுன முழுமையான பங்களிப்பை வழங்கும் என நம்புகி...
முல்லை. நாயாறு களப்பு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கை!