ஆணைக்குழுக்களின் உருவாக்கம் என்பது நாட்டின் முன்னேற்றம் கருதியதானதாக அமைய வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 9th, 2018

ஆணைக்குழுக்களை உருவாக்கி, அதற்கென உறுப்பினர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு என ஊதியங்கள் வழங்கப்படுகின்றபோது, வழங்கப்படுகின்ற ஊதியத்திற்கான உச்சப் பயனை இந்த நாட்டின் முன்னேற்றம் கருதி பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அவ்வாறு பயனில்லை எனில் மக்களது பணத்தைக் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் என்பது வீணானதொரு செலவினமாகும் என்றே கருத வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  கோரிக்கை விடுத்துள்ளார்.

வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழான கட்டளைகள், தேசிய கல்வி ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும்  கருத்து தெரிவிக்கையில் –

ஏற்கனவே அரச சேவைகள் ஆணைக்குழுவின் கீழிருந்த  கணக்காய்வுப் பணிகள்  யாவும் 19வது அரசியல்யாப்பு திருத்தத்தின் அடிப்படையில், இந்த அரசின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்பட்டது.

என்றாலும், இன்றுவரையில் தேசிய கணக்காய்வு கட்டளைச் சட்டம் நிறைவேற்றப்படாமை காரணமாக இந்த ஆணைக்குழு வெள்ளை யானையாகவே இன்னமும் இருந்து வருகின்றது. எனவே, மேற்படி கட்டளைச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கான விரைவான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன், மேற்படி கட்டளைச் சட்டத்திற்கு உள்வாங்கப்பட்டிருந்த 53 பிரிவுகளில் 20 பிரிவுகள் நீக்கப்பட்ட நிலையிலேயே இக் கட்டளைச் சட்டமூலமானது சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் ஒரு தகவல் ஊடகங்களில் வெளியாகியிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. எனவே, இதன் உண்மை தன்மை குறித்தும் இங்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்க விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புக்களை தடுக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள்...
கட்சியின் கொள்கை நடைமுறைகளுக்கு இணங்க மக்களது நலன்களை முன்னிறுத்தி ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் – கட்ச...
எழுத்துக்களை விட எனது வெளிப்படையான வார்த்தைகள் வலுவானவை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!