அரசியல் கண்ணாடிகளை கழற்றிவிட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வாருங்கள் – அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Tuesday, November 23rd, 2021

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தின் மூலம் சகல மக்களும் அரசியல் சமூக பொருளாதார சமத்துவத்தை பூரணமாக அனுபவிக்கும் காலத்தை நாம் உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காட்சிகளை நிறம் மாற்றி காட்டும் அரசியல் கண்ணாடிகளை கழற்றி விட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வரவேண்டும் என்று சகல அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23.11.2021) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் அவர்  தெரிவிக்கையில் –

“எத்தகைய தடைகளையும் சவால்களையும் அரசியல் குழப்பங்களையும் எதிர்கொண்டு, சமூக பொருளாதார அபிவிருத்தியை கட்டியெழுப்ப எமது ஆட்சி திடசங்கற்பம் பூண்டுள்ளது.

சகல இன மத சமூக மக்களும் சரிநிகர் சமன் என்ற சமத்துவ சிந்தனையை நடை முறைப்படுத்தவே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தை ஜனாதிபதி அவர்கள் பிரகடனம் செய்திருக்கிறார்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அவ்வாறான நிலை மாறி பரந்த வெளிச்சம் கூட மருண்டவன் கண்ணுக்கு பேயாக தெரியும் காலமாக இது மாறியிருக்கிறது.

எமது தேசத்தின் மக்களது ஆரோக்கியமான வாழ்க்கையை முன்வைத்து, ஜனாதிபதி அவர்கள் எடுத்து வருகின்ற முயற்சிகளை நான் ஒரு மக்கள் நேய நோக்கமாகவே பார்க்கிறேன்.

இரசாயன உரம் மற்றும் விவசாய உள்ளீடுகள் மற்றும் சுத்தமற்ற குடிநீர் காரணமாக எமது நாட்டில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள் ஒரு வருடத்தில் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 125,000 க்கும் அதிகமானவர்கள் சிறுநீரக நோயாளர்களாக மாறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பக்கத்தில் இத்தகைய நோய்களற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு இந்த இயற்கை உரப் பயன்பாடு வழிவகுப்பதுடன், மறுபக்கத்தில் அதிகளவிலான அந்நியச் செலாவணியை மீதப்படுத்தவதற்கும் எம்மால் இயலுமாகின்றது.

இத்தகைய முயற்சிகள் தேசிய உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கும் வழிவகுக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சகல மக்களுக்கும் சுத்தமான குடிநீர் என்ற திட்டமும் அதற்கான முன்னெடுப்புகளும் நோயற்ற நாடாக இலங்கையினை உருவாக்கும்.

இந்த வரவு செலவுத்திட்டத்தில் நில வேளாண்மைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது, இது விதைத்த நிலத்தை உழுது ஊருக்கும் பேருக்கும் படங்காட்டும் தேர்தல் நாடகம் அல்ல, உழைக்கும் உழவர்கள் தொழுதுண்டு வாழாமல் உழுதுண்டு வாழும் வாழ்வியல் உரிமைக்காகாவே அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அதுபோல், நீர் வேளாண்மைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது, இது படகுச்சவாரி செய்து படங்காட்டி அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக அல்ல, நீர் வளங்கள் அனைத்தையும் தம் வாழ்வின் நலன்களுக்காக, நாட்டின் முன்னேற்றத்திற்காக் எமது மக்கள் பயன்படுத்தி பயனுற வேண்டும் என்பதற்காகவே அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அரசியலில் மட்டுமன்றி அபிவிருத்தியிலும் சமத்துவம் கேட்டுத்தான் நாம் அன்று உரிமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அந்த வகையில் எமது உரிமை போராட்ட வழிமுறைய மாற்றி தேசிய நல்லிணக்க பாதையில் பயணிக்க தொடங்கியிருந்தாலும் அபிவிருத்தியில் சமத்துவம் என்ற எமது எண்ணங்களும் ஈடேறியே வருகின்றது.

தேசிய உற்பத்திகளை அதிகரிக்கக்கூடிய அனைத்து வழிகளையும் மேற்கொள்வதற்கும்> அந்த உற்பத்திகளை தரமான உற்பத்திகளாக மேற்கொள்வதற்கும் நாம் முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

000

Related posts:


பலாலி விமான நிலைய நுழைவாயில் மாற்றம் 2000 ஏக்கர் தனியார் காணிகளை அபகரிக்கும் திட்டம் - டக்ளஸ் எம்.ப...
வடக்கின் கல்விசார் உட்கட்டமைப்பில் அமைச்சர் டக்ளஸின் பங்களிப்பு அலாதியானது - அமைச்சர் தினேஸ் பெருமித...
மக்கள் வரிசையாக நிற்கின்ற நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!