இருள் அகன்று நிரந்தர ஒளி பிறக்கட்டும் – தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Sunday, January 14th, 2018

எமது மக்கள் கதிரவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஓர் உன்னத தினமே தைப்பொங்கல் திருநாளாகும். இத்தைப்பொங்கல் திருநாளில் மக்களாகிய உங்களது மனங்கள் தோறும், நீடித்த நிம்மதியை தருகின்ற நிரந்தர மகிச்சியும் பொங்கி வரவேண்டும் என வாழ்த்துகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அலர் மேலும் தெரிவிக்கையில் –

தைப்பொங்கல் தினத்தை உழவர் திருநாள் என்றும், தமிழர் பெருநாள் என்றும் மகிழ்ச்சியோடு வரவேற்று காலந்தோறும் நீங்கள் கொண்டாடி வருகின்றீகள்.

இயற்கையை வணங்கிய எமது முன்னோர்களின் வரலாற்று பாரம்பரியங்களை ஏற்று எமது மக்கள் கதிரவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஓர் உன்னத
தினமே தைப்பொங்கல் திருநாள்.

எமது பண்பாட்டு அடையாளங்களை பாதுகாத்து எமது மக்கள் கொண்டாடும் பெரு மகிழ்ச்சிக்கான தினமே தைப்பொங்கல் பெருநாள்!

பிறந்து வரும் இத்தைப்பொங்கல் திருநாளில் மக்களாகிய உங்களது
மனங்கள் தோறும்,…

நீடித்த நிம்மதியை தருகின்ற நிரந்தர மகிச்சியும் பொங்கி வர வேண்டும்!..
இதுவே எமது ஆழ்மன விருப்பமாகும்!…

இந்த உறுதியான நம்பிக்கையோடு நாம் அனைவரும் பிறந்து வரும் தைப்பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு வரவேற்போம்!…

எல்லோரும் இன்புற்றிருப்பதே யாம் பெற்ற இன்பம்!
ஆனாலும் நீங்கள் நினைத்தவைகள் யாவும் நிறைவேறவில்லை என்ற
ஏமாற்றங்களுக்கு மத்தியிலேயே,..

உங்கள் வாழ்வின் இன்பங்களை அனுபவிக்கும் இலட்சியக்கனவுகளில்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

நான் என்றும் உங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருப்பவன்.
உங்கள் கனவுகள். ஏக்கங்கள், தேவைகள் எவைகள் என்பது
எனக்கு நன்றாக தெரியும்.
வான்முகில் வழாது பெய்க என்று உழுதுண்டு வாழும் மக்கள்
வாழ்த்தி பாடினாலும்,…

மழை காலத்தில் நீங்கள் வெள்ளத்திலும் சேற்றிலும் சகதியிலும்
அவலப்படுகின்றீர்கள்!

உங்கள் வாழ்விடங்கள்,.. நீங்கள் நடந்து திரியும் வீதிகள்,. நகரங்கள்,..
யாவுமே சுத்தமும் சுகாதாரமும் இன்றி நீங்கள் துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

வீடற்ற மக்கள் வீதியில் நிற்கிறீர்கள். நிலமிழந்த மக்களும்
காணாமல் போன உறவுகளை இழந்து நின்மதியை தொலைத்த மக்களும்
நீதி கேட்டு தெருக்களில் நிற்கிறீர்கள்.

சிறைகளில் வாடும் உங்கள் உறவுகளை எண்ணி நீங்கள்
ஏக்கத்துடன் வாழ்த்து கொண்டிருக்கிறீர்கள்.

வேலையற்ற பட்டதாரிகள், இளைஞர் யுவதிகள் யாவரும் நிரந்தர
வேலை வாய்ப்பின்றி துயரப்படுகின்றீர்கள்.

எமது வரலாற்று வாழ்விடங்கள் யாவும் அபிவிருத்தியின்றி
விட்ட குறையில் வீழ்ந்து கிடக்கின்றது.

எமது மக்களின் வாழ்வின் மீது பேரவலங்களை சுமத்திய போர்ச்சூழலும், கொடிய வன்முறைகளும் இங்கு ஒழிந்து போனாலும், போரின் வடுக்கள் இன்னமும்முழுமையாக தீர்ந்து போகவில்லை.

எமது கடல் எல்லை வளங்களையும், விவசாய நிலங்களையும் எமது மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.

எந்த இலட்சிய கனவுகளுக்காக இத்தனை இழப்புகளோடும் எமது மக்கள் அம்புகள் தைத்த மான்களாக துடி துடித்து மாய்ந்தார்களோ, …
அந்த இலட்சிய கனவுகள் இன்னும் இங்கு ஈடேறவில்லை.

இத்தகைய நீடித்த துயரங்களின் மத்தியில் உங்கள் மனங்கள்
வாடியிருப்பது எமக்கு ஆழ்ந்த துயரத்தை தருகின்றது.

ஆனாலும் வாடிய பயிர்களை கண்டு நாமும் வாடியிருக்காமல்,
உங்கள் வாட்டத்தை போக்கவே நாம் தொடர்ந்தும் உழைப்பதற்கு
உறுதி கொண்டு நிற்கின்றோம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அது போல் இம்முறை பிறந்து வரும் தைப்பொங்கல் திருநாளோடு,..

உங்கள் வாழ்வில் புதியதொரு மாறத்தை நீங்களாகவே உருவாக்கவல்ல வாய்ப்பொன்றும் உங்களை தேடி வருகின்றது.

மகிழ்ச்சி தரும் மாற்றத்தை உருவாக்க இன்றே எழுந்திருங்கள்.
நாளை இதை விட தடைகள் அதிகமாகலாம்.

நேற்று என்பது உடைந்த பானை.
நாளை என்பது  மதில் மேல் பூனை
இன்று என்பதே உங்கள் கையில் உள்ள வீணை.

ஆகவே உங்கள் கையில் இருக்கும் வீணை என்னும் காலத்தை உங்கள் தெளிவான சிந்தனையால் மீட்டி,.. எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் நல்லிசை பிறக்கச் செய்யுங்கள்!

நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே என்று கூறும்
மதிநுட்ப சிந்தனை வழி நின்று உங்கள் இலக்கை எட்ட
எழுந்து வாருங்கள்.

கல்லோடு கட்டி கடலிலே வீசினாலும் படகாக நாம் மிதப்போம் என்ற ஆழ்மன உறுதியோடு நீங்கள் நிமிர்ந்தெழவேண்டும்!

மாற்றங்களை உருவாக்க முடியாத தொன்று தொட்ட பழைய அரசியல் வழிபாடுகளை முழுமையாக கைவிட்டு எழுந்து வாருங்கள்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்! தர்மம் மறுபடி வெல்லும்!
நாமார்க்கும் அடிமையல்லோம், நமனை அஞ்சோம்!

இந்த உறுதியும், நம்பிக்கையும், உங்களுக்கான உண்மையுள்ள வழிகாட்டலுமேஎமது வரலாற்று வாழ்விடங்களில் மாற்றங்களை உருவாக்கும்.

இருள் அகன்று எங்கும் நிரந்த ஒளி தோன்றட்டும்.
ஒவ்வொரு மக்களின் மனங்களிலும் மகிழ்ச்சி பொங்கி வழியட்டும்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!…
யாதும் ஊரே யாவரும் கேளிர்!!…

அனைவருக்கும் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Related posts:

சட்டங்கள் அமுலாக்கத்தையும்  அக்கறையோடு செய்யுங்கள் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்ட...
16 இலட்சத் தடுப்பூசி - வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகவே கருதுகின்...
மூத்த ஒலிபரப்பாளர் ஜோர்க்கிம் பெனான்டோவின் இழப்பு, எமது மக்கள் மத்தியிலான பல்துறை ஆளுமைகளுக்கான வெற்...