அரசியலுரிமை பிரச்னைக்கான தீர்வு காலம் கடத்தி செல்வதை அனுமதிக்க முடியாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, March 22nd, 2019

எமது மக்கள் முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினை அரசியலுரிமை பிரச்சினை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனாலும், அரசியலுரிமை பிரச்சினையைக்கு தீர்வு காண முயற்சிக்கிறோம் என்று காரணம் காட்டி, ஏனைய நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியை பிற்போட முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –
நடை முறை பிரச்சினைக்கு மட்டும் தீர்வு கண்டு விட்டு அரசியலுரிமை பிரச்னைக்கான தீர்வை காலம் கடத்தி செல்வதையும் நாம் அனுமதிக்க முடியாது. சகல பிரச்சினைகளுக்குமான தீர்வு முயற்சிகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
கடந்து சென்ற வரலாற்றின் பாடங்களை சகலரும் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். இதை நான் அரச தரப்பை நோக்கிய விமர்சனங்களாக மட்டும் முன்வைக்க விரும்பவில்லை. சக தமிழ் கட்சிகளின் தலைமைகளை நோக்கியும் எனது விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் நான் முன் வைக்க விரும்புகிறேன்.
தமிழ் பேசும் மக்கள் தனித்துவமான கலை கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை கொண்டவர்கள். தமக்கென ஒரு பொருளாதார வளங்களை கொண்டவர்கள். பேசும் மொழியாலும், வாழும் நிலத்தாலும் வேறு பட்டு நின்றாலும் இலங்கைத்தீவின் தேசிய இனங்களில் ஒன்றாகவே என்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
அனைத்து அடக்கு முறைகளும் தமிழ் தேசிய இனத்தை சூழ்ந்து நின்ற போதுதான் நாங்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். மனித உரிமைகளும், மனித நேயங்களும், தேசிய இனங்களின் சமத்துவ உரிமையும் இங்கு நிலவ வேண்டும் என்பதற்காகாவே நாம் போராடப்புறப்பட்டவர்கள்.
ஆனாலும், நாங்கள் ஆயுதம் ஏந்திய பொழுதிலும் சரி அதன் பிறகான ஜனநாயக வழியிலும் சரி ஒரு போதும் அறம் மறந்த அரசியல் வழியை கொண்டிருந்தவர்கள் அல்ல. அவ்வாறு யாரும் எம்மீது சுட்டு விரல் நீட்டுபவர்கள் இருந்தால் அது வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது மட்டுமே உண்மை. அடுத்தவர்கள் வகுத்த பாதையில் ஏறி நாம் நடந்தவர்கள் அல்ல, எமக்கென்று பாதைகளை நாமே வகுத்துக்கொண்டவர்கள்.
அன்றைய சூழலில் ஆயுத வழி பாதையை நாம் வகுத்திருந்தோம். ஆனாலும், ஒரு தாய் பெற்ற பிள்ளைகளான நாம் திசைக்கொன்றாகசிதறி நின்று, எமக்குள் நாமே மோதியதால் எமது உரிமைப்போராட்டம் அழிவு யுத்தமாக மாறிசெல்ல தொடங்கியது.
இந்த ஆபத்து நிலை எம்மையும் அழித்து எமது மக்களையும் அழியக்கொடுத்து விடும் என்ற தீர்க்கதரிசனத்தை நாம் உணர்ந்து கொண்டோம். ஆகவேதான், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஒரு ஆரம்ப படியாக ஏற்று நாம் புதியதொரு ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியிருந்தோம்.ஆனாலும், அந்த இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறையில் பங்கெடுப்பதற்கான உரிமை எமக்கு மறுக்கப்பட்டிருத்தையும் நான் சொல்லியே ஆக வேண்டும்.
நாம் வகுத்துக்கொண்ட புதியதொரு ஜனநாயக வழியை ஏற்று, எம்மை நோக்கியும், எமது அலுவலகங்களை நோக்கியும் எமது மக்கள் அணி திரண்டு வந்திருந்தார்கள். இதை கண்டு சகிக்க முடியாத சக்திகளே எம் மீது அவதூறுகளை திட்டமிட்டு பரப்ப தொடங்கினார்கள். அந்த அவதூறுகளின் நீட்சியே எம்மை தொடர்ந்து வந்திருக்கிறது.
நீதி விசாரணை இருக்கின்றது. நீதி கோருங்கள்! நீங்கள் கூறும் நல்லாட்சி நடக்கிறது, ஆதாரங்களுடன் எம்மை நீதியின் முன் விசாரியுங்கள். இதை எத்தனை தடவைகள் நாம் கூறியும் எம்மீதான அவதூறுகளை யாராலும் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே, அவர்கள் கூறிய அவதூறுகளில் இருந்து வரலாறு எம்மை விடுதலை செய்திருக்கின்றது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னரான காலத்தில் நடந்த எமது மக்களின் அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் நானும் தார்மீக பொறுப்பெடுக்கின்றேன். ஏனென்றால், நானும் அந்த உரிமை போரில் ஈடுபட்டவன். ஒரு சுதந்திர போராட்ட இயக்கத்தையே வழி நடத்தி சென்றவன்.
அதற்கு பின்னரான அழிவு யுத்தத்திற்கு நாம் ஒரு போதும் ஆதரவு வழங்கியவர்கள் அல்ல. அழிவு யுத்தற்கு ஆதரவு வழங்கியவர்களும், அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தியவர்களும், எமது மக்கள் செத்தொழிந்த அவலங்களையும் அழிவுகளையும் வைத்து, மக்களை உசுப்பேற்றி தேர்தல் வெற்றிகளை தமதாக்கி கொண்டவர்களுமே, எமது மக்களின் அவலங்களுக்கும் யுத்தக்குற்றங்களுக்கும் பொறுப்பு கூற வேண்டியவர்கள்.
இன்று பூட்டிக்கிடக்கும் ஐ.நாவின் கதவுகளை நீங்கள் தட்டிக்கொண்டிருக்கிறீர்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் பேசி தீர்ப்பதற்கான அரசின் கதவுகள் அகல திறந்திருத்த போது, ஆகாயத்தில் இருந்து சூரியனும் சந்திரனும் இறங்கி வந்து தமிழர் தேசத்திற்கு ஒளி தருவார்கள் என்றா நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தீர்கள்.
இலங்கை இந்திய ஒப்பந்தம். சந்திரிகா கொண்டு வந்த அரியதொரு தீர்வு, பிரதமர் ரணில் ஆட்சியில் நோர்வே அனுசரனை, அதை விடவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ச அரசின் முயற்சிகள், அனைத்தையும் கோட்டை விட்டீர்கள்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு வாருங்கள். ஆறு மாத அவகாசத்தில் பிரச்சினைகளை தீர்க்கலாம் என்ற மகிந்த ராஜபக்ச அவர்களில் அழைப்பை உங்கள் சுயாபங்களுக்காகாக புறக்கணித்தீர்கள். ஆறு மாத அவகாசம் மட்டும் தான். வாருங்கள் நானும் வருகின்றேன். ஆறு மாதங்களுக்குள் தீர்வு இல்லையென்றால் நானும் உங்களுடன் சேர்ந்து அதை விட்டு வெளியேறி வருவேன் என உங்களுக்கு நான் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தேன். அதை கூட நீங்கள் ஏற்றிருக்கவில்லை.
அவ்வாறு ஏற்று நீங்கள் நடந்திருந்தால் அரசியல் தீர்வை எடுத்திருக்கலாம். அல்லது, மகிந்த அரசு தீர்வு தரவில்லை என்றால் அவர்களை நீங்கள் கூறும் சர்வதேச சமூகத்தின் முன்பாக அம்பலப்படுத்தியிருக்கலாம். ஆறு மாத கால அவகாசத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்ததின் விளைவுகள் இன்று ஆண்டுகள் பல கடந்தும் அரசியல் தீர்வின்றி தொடரும் துயர்களே இங்கு நீடித்து வருகிறது.
கனிந்து வந்த வாய்ப்புகளையெல்லாம் நீங்கள் பயன்படுத்த வந்திருந்தால், எமது மக்களுக்கு இத்தனை அழிவுகளும் அவலங்களும் நடந்திருக்காது, யுத்தக்குற்றங்கள் எமது மண்ணில் பாரிய அளவில் நடந்திருக்காது. முள்ளிவாய்க்கால் அழிவுகளும் நடந்திருக்காது.
இன்று யுத்தக்குற்ற விசாரணை என்று கூறி ஐ.நாவின் கதவுகளையும் யாரும் தட்ட வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. வரலாறின் பாடங்களை கற்றுக்கொண்டு இனியாவாது உங்கள் அரசியல் பலத்தை பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களின் நிரந்தர அரசியல் தீர்விற்கு வழி தேட பாருங்கள் என்றார்.

Related posts:


சுயநல அரசியல்வாதிகளின் பிரதேசவாதத்தால் மக்களின் அபிலாசைகள் முடக்கப்படுகின்றது - பூநகரியில் டக்ளஸ் எம...
மொத்த விற்பனை அதிகரிப்பு - பேலியகொட மத்திய மீன் சந்தையில் 40 வியாபார நிலையங்களை உள்ளடக்கிய தொகுதியை ...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு ஊடான போக்குவரத்து சேவை 35 வருடங்களின் ...