கிராம மட்டங்களில் கட்சியின் செயற்றிட்டங்களை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்புவோம் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 3rd, 2018

கிராம மட்டங்களில் கட்சியின் கட்டமைப்பை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்புவதனூடாகவே எதிர்காலத்தில் கட்சியின் செயற்றிட்டங்களை சிறப்பாக முன்னெடுக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்கள் பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் உதவி நிர்வாக செயலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் கடந்த காலங்களைப் பார்க்கிலும் எமது கட்சிமீது மக்கள் பெரும் நம்பிக்கையைக் கொண்டுள்ளார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

அதனடிப்படையில்தான் வடக்கு கிழக்கில் மட்டுமல்லாது தென்பகுதியிலும் தேர்தல் பெறுபேறுகள் மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் எமக்கு நற்பெயரை ஏற்படுத்தி தந்துள்ளது.

இதனூடாக எமது மக்களுக்கு, சக தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் எமக்கும் இடையில் எவ்வாறான வேறுபாடுகள் உள்ளது என்று இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படையாக உணர்த்தியுள்ளன.

கடந்த காலங்களில் எம்மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுச் சம்பவங்கள் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகள் ஊடாக கொலைச் சூத்திரதாரிகள் யார் என்பதை நீதிமன்றங்களும் வெளிப்படுத்தியுள்ளன.

என்மீதும் என் கட்சி மீதும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சக தமிழ்க் கட்சிகளினாலும் சில தமிழ் ஊடகங்களினாலும் திட்டமிட்ட ரீதியில் சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம். இது ஒருவகையில் எம் கட்சிமீது ஏனைய தமிழ்க் கட்சிகள் கொண்டுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியாகவே நாம் பார்க்கின்றோம்.

அந்தவகையில் எமது ஆளுகைக்குட்படும் உள்ளூராட்சி சபைகளில் எமது ஆளுமையையும் அக்கறையையும் முன்னிறுத்தி மக்கள் நலன் சார்ந்த விடயங்களை நாம் முன்னெடுத்து அந்தப் பகுதிகளின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் அதிக கவனம் எடுக்கவுள்ளோம்.

இதேபோன்றுதான் நாம் தேர்தலில் போட்டியிட்ட ஏனைய அனைத்து பகுதிகளிலும் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை சேவை மனப்பாங்குடன் மேற்கொள்ள திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்றும் அதற்கு கட்சி தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மக்களின் ஒருமித்த ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

28755682_1692485644123849_532410019_o

Related posts: