விசாரணைகளை முன்னெடுக்க பதவிகள் தடையாக இருக்கக் கூடாது – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, May 21st, 2019

இந்த நாட்டில் அபிவிருத்தி முதற்கொண்டு, எத்துறை சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமானாலும் முதலில் நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, அவ்வாறு உறுதி செய்யப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் முழுமையான நம்பிக்கை எட்டப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2008 ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்றைய நிலையில், இந்த நாட்டைப் பார்க்கின்றபோது, ஒரு சாதாரண பெட்டிக் கடையை விட மோசமான நிலைக்கு இந்த நாடு தள்ளப்பட்டு இருப்பதையே காணக் கூடியதாக இருக்கின்றது.

பல தரப்பு அரசியல் போட்டி மனப்பான்மை கொண்டவர்களை  நீங்கள் ஆட்சி எனக் கூறிக் கொண்டு இருக்கின்றீர்கள். அதுதான் இப்போது இந்த நாட்டில் நடந்து கொண்டு இருக்கின்றது.

பேரழிவுகள் – மக்களது அவலங்களில்கூட தத்தமது கட்சிகளுக்கு தேர்தல் ரீதியில் என்னென்ன இலாபங்கள் இருக்கின்றன? என கணக்குப் பார்த்துக் கொண்டு, அதற்கேற்ப பிரச்சாரங்களை முன்னெடுப்பதிலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

இத்தகைய நிலைமையை நீங்கள் இன்னும் எத்தனைக் காலத்திற்கு நீடிக்கப் போகிறீர்கள்? என்பதே இப்போதிருக்கின்ற முக்கிய கேள்வியாக இருக்கின்றது.

இத்தகைய நிலை நீடிப்பதானது இந்த நாட்டுக்கு உகந்ததல்ல என்பதை அனைவரும் உடனடியாக புரிந்து கொள்வதற்கு முன்வர வேண்டும்.

அவர் அவரது கட்சி அரசியல்களை முன்வைத்தும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை முன்னெடுத்தும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக் கூடிய சந்தர்ப்பம் இதுவல்ல என்பதையே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

எனவே, இந்த நாட்டில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்பதாக, நாட்டு மக்கள் மத்தியில் நம்பகரமான அமைதிச் சூழல் கட்டமைப்பினை உறுதி செய்வதும், அதனை ஒரு செயற்பாட்டு ரீதியிலான செய்தியாக வெளிநாட்டினர் மத்தியில் உணர்வுப்பூர்வமாக உணர்த்துகின்ற ஏற்பாடுகளுமே இன்றைய தேவையாக இருக்கின்றது.

இந்த நாட்டில் அமைதிச் சூழலுக்கான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமெனில், பேராயர் கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட நாட்டில் பலதரப்பட்ட குரல்கள் குற்றஞ்சாட்டி வருகின்ற அண்மைக்கால அனர்த்தங்களுக்கு பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகின்ற பிரதான சக்திகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுதல் அவசியமாகின்றது.

அதேநேரம், குற்றஞ்சாட்டப்படுகின்றவர்கள் உண்மையில் குற்றவாளிகள் அல்லர் எனில், அவர்கள் ஏதேனும் பதவிகளை வகிப்போராக இருந்தால், தாமாகவே முன்வந்து தங்களது பதவிகளை இராஜினாமா செய்து, விசாரணைகளுக்கு முகங்கொடுத்து, தங்களை நிரூபிக்க வேண்டும். அதுவே ஒரு முன்னுதாரண செயற்பாடாக அமையும் என நம்புகின்றேன்.

அவ்வாறு அத்தகைய நிலைக்கு வருவதற்கு அவர்கள் தயாரில்லை எனில், அவர்களை பதவி விலக்கி, உரிய விசாரணைகளுக்கு உட்படுத்த இந்த அரசு முன்வர வேண்டும்.

இந்த இரண்டு ஏற்பாடுகளும் இடம்பெறாத நிலையில், இந்த நாட்டில் அமைதிச் சூழல் பற்றிய நம்பிக்கையினை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது என்பது கடினமான காரியம் என்றே நாட்டின் பெரும்பாலான மக்களது தற்போதைய கருத்துக்களின் படி தெரிய வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


மக்களுக்கு சரியான மாற்று வழியைக் காட்டுவதற்கே ஈ.பி.டி.பி தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகின்றது - ச...
மத அடையாளங்களை பிற மதம் சார்ந்த மக்களிடம் திணிப்பதை தவிர்ப்பதே ஆரோக்கியமானது – டக்ளஸ் எம்.பி. தெரிவி...
சுகாதார தொண்டர் நியமன இழுபறி நிலைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!