மக்களுக்கு சரியான மாற்று வழியைக் காட்டுவதற்கே ஈ.பி.டி.பி தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

Sunday, November 13th, 2016

கொடிய யுத்தம் மக்களை அழிவுக்குள் இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது மக்களை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு சரியான மாற்று வழியைக் காட்டுவதற்குமே ஈ.பி.டி.பி தன்னை முழுமையாக அர்ப்பணித்துவருகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தினகரன் தேசிய நாளிதழுக்கு வழங்கிய செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவையும் எமது EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்காக முழுமையாக பதிவிடுகின்றோம்….

கேள்வி ஒரு காலத்தில் வடக்கு மக்களிடையே மிகுந்த செல்வாக்குச் செலுத்தியிருந்த ஈ.பி.டி.பி அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளால் அதன் மக்கள் ஆதரவு இறங்கு முகமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்கான காரணம் என்ன?

பதில் – கொடிய யுத்தம் மக்களை அழிவுக்குள் இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது மக்களை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு சரியான மாற்று வழியைக் காட்டுவதற்குமே ஈ.பி.டி.பி தன்னை அர்ப்பணித்திருந்தது.

அந்த நேரத்தில் ஈ.பி.டி.பியின் அலுவலகம் நோக்கி ஆயிரக்கணக்கில் மக்கள் அணி திரண்டு வந்தார்கள். அவர்களின் தேவைகள் அதிகமாக இருந்தன. அப்படி எம்மைத் தேடி வந்தவர்களிடையே நாம் அரசியல் பேசவில்லை. அவர்களை வாக்களார்களாக அணுகவில்லை. அவர்களுக்கு உதவி செய்கின்ற பணியை மட்டுமே நாம் செய்தோம். மக்கள் இயல்புச் சூழலில் வாழ்வதையும், ஒரு ஜனநாயகச் சூழல் உருவாக்கப்படுவதற்கும் நாம் பாடுபட்டோம்.

எங்களது செவைகள் காயங்களுடனும், வலிகளுடனும் வருகின்ற மக்களுக்கு மருந்து கொடுக்கும் வைத்தியரைப்போலவே நாம் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலேயே மக்களுக்கு உதவினோம்.

எம்மை நோக்கி மக்கள் அணி திரள்வதைப் பார்த்து எம்மீது பழிகளையும், அவதூறுகளையும் சுமத்தினார்கள். மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த எமது தோழர்களையும், எமது ஆதரவாளர்களையும் புலித் தலைமையால் தெருத் தெருவாக சுட்டுக் கொலை செய்து மக்களை அச்சுறுத்தினார்கள். ஆயுதங்களுக்கு பயந்த மக்களின் மனோ நிலையில் நிரந்தரமான பயம் குடியேறிவிட்டது.

இருந்தபோதும் நாம் வகுத்துக் கொண்ட கொள்கை வழியில் உறுதியாகவே முன்னேறினோம். எமது அரசியல் நிலைப்பாடு சரியானது என்பதை மக்களுக்கு இன்று காலம் உணர்த்தியிருக்கின்றது.

01

கேள்வி  நீங்கள் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் மக்களுக்கு ஆற்றிய சேவைகள், வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் பல சமயங்களில் உங்கள் அரசியல் எதிரிகளால் கூடசிலாகிக்கப்பட்டுள்ளன. அவ்வாறிருக்க, தேர்தல்களில்  உங்களது கட்சியை மக்கள் மறந்துபோவதேன்?

பதில் – இந்தக் கேள்விக்கு மக்களிடமிருந்துதான் பதில் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். அடுத்த தேர்தலில் மக்கள் இதற்கு சரியான பதிலை வழங்குவார்கள் என்று நம்புகின்றேன். நீங்கள் கூறியதைப்போல் புலிகள் உட்பட போலித் தமிழ்த் தேசியம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்வரை, வேலைவாய்ப்புக்களையும், வாழ்வாதார உதவிகளையும் ஈ.பி.டி.பியிடம் பெற்றுக் கொள்ளுங்கள். வாக்குகளை மட்டும் தமிழ்த் தேசியத்திற்காக தமக்கு போடுங்கள் என்று கூறியதை மக்கள் எம்மிடம் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஆகவே இதில் வாக்குகளை அபகரித்துக்கொண்டு தமிழ் மக்களை காலங்காலமாக ஏமாற்றுகின்றவர்களின் மோசடியான அரசியலை தமிழ் மக்கள் தொடர்ந்தும் நம்புவதை என்னவென்று கூறுவது. இதிலிருந்து நீங்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள முடியும். அதாவது ஈ.பி.டி.பி மக்களுக்கு உதவுகின்ற கட்சியாகவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கின்ற கட்சியாகவுமே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. போலித் தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களோ, தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து அரசியல் பதவிகளை அலங்கரிப்பவர்களாகவும், தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சீரழிப்பவர்களாகவுமே இருக்கின்றார்கள். அவர்கள் தேர்தலுக்குத் தேர்தல் தமிழ் மக்களின் ஐக்கியத்தைக் காட்டுமாறும், ஒற்றுமையைக் காட்டுமாறும், ஏகப்பிரதிநிதித்துவத்தைக் காட்டுமாறும் கூறியே காலத்தை வீண் விரயமாக்கியிருக்கின்றார்கள் என்பதாகும்.

epdp

கேள்வி  கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் மக்களின் விருப்புக்கு நீங்கள் மதிப்பளிப்பதாகக் கூறியிருந்தீர்கள். அவ்வாறெனில் மக்களின் விருப்பிற்கேற்ற கட்சியாக ஈ.பி.டி.பியையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்களா?

பதில் – வருடத்தில் 364 நாட்களும் மக்கள் ஈ.பி.டி.பியுடன்தான் இருக்கின்றார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும், ஆயுத நிழலில் போதிக்கப்பட்டதையும், போலித் தமிழ்த் தேசிய உணர்ச்சிகளுக்கும் எடுபட்டுவிடுகின்றார்கள். எது எப்படியாக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் மக்கள் வழங்கும் தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்வதுதான் நியாயமாகும்.

மக்களின் அந்த தீர்ப்புக்கள் சரியாக அமைந்திருக்கின்றதா? தவறாக அமைந்திருக்கின்றதா? என்பதை தற்போது மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். கூட்டமைப்பின் பொய்யானதும், அவர்களால் நிறைவேற்ற முடியாததுமான வாக்குறுதிகளை நம்பி அவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் இன்று கூட்டமைப்பை விமர்சிக்கவும், அவர்களை நோக்கி தமது எதிர்ப்பை வெளிக்காட்டவும் செய்கின்றார்கள். இந்த நிலைமை தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் அடிக்கடி இடம்பெறுவதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

ஆனால் எமது நிலைப்பாட்டை ஆதரித்து வாக்களித்த மக்களை நாம் ஒருபோதும் ஏமாற்றியதில்லை. எதை வாக்குறுதிகளாக கூறினோமோ அதைச் செய்திருக்கின்றோம். அல்லது அதற்கும் மேலதிகமாக மக்களுக்கு பயனுள்ள பணிகளைச் செய்வதற்கு முயற்சி செய்திருக்கின்றோம். நாம் மக்களுக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்கியதில்லை. ஆனாலும் தமிழ் மக்களுக்கு இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையும், அவை தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

எனவே ஈ.பி.டி.பி கட்சியின் கட்டமைப்பையோ, வேலைத்திட்டங்களையோ, கொள்கையையோ மாற்றவேண்டிய அவசியமில்லை. அரசியல் மாற்றத்திற்கு ஏற்பவும், உண்மையை உணர்ந்து சரியான வழியில் பயணிக்க முற்படும் தமிழ் மக்களின் மன மாற்றத்திற்கு ஏற்பவும் கட்சியின் செயற்பாடுகளையும், அணுகுமுறைகளையும் மேலும் செழுமைப் படுத்துவதை அவசியமென்று கருதுகின்றோம். அதற்கான காரியங்களை நாம் செயற்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.

hqdefault

கேள்வி  நீங்கள் அமைச்சராக இருந்த காலத்தில், வடக்கின் அபிவிருத்தி பணிகளுக்கு மாத்திரமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு, படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு, மீள்குடியேற்றம் போன்றவற்றில் எந்தவித அக்கறையும் காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டது. தற்போது நிலைமைகள் எந்தளவில் உள்ளன?

பதில் – இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசுடன் இணக்க அரசியல் நடத்துகின்றார்கள். அந்த இணக்க அரசியலின் ஊடாக, சிறைகளிலுள்ள முழுத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்றும், படையினர் வசமிருந்த மக்களின் காணிகள் எல்லாமும் மீண்டும் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுவிட்டது என்றும், அபிவிருத்திப் பணிகள் பாராட்டத்தக்கவகையில் நடைபெறுகின்றது என்றும், மீள் குடியேற்றங்கள் எல்லாமும் முழுமையாக நடந்து முடிந்துவிட்டது என்று நீங்கள் குறிப்பிட்ட தரப்புகள் கூறினால் அது உண்மையாகிவிடுமா?

நீங்கள்தான் கூறினீர்கள் எமது அரசியல் எதிரிகளே சிலாகிக்கும் அளவுக்கு நாங்கள் பணியாற்றி இருக்கின்றோம் என்று. ஈ.பி.டி.பி அரசியல் தீர்வையும், அபிவிருத்தியையும் சமாந்தரமாகவே முன்னெடுக்கவேண்டும் என்று வேலைத்திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றது. அரசியல் தீர்வை நோக்கி எம்மால் சில அரசியல் முயற்சிகளை முன்னெடுக்க முடிந்தபோதும், யுத்தத்தை முன்னிலைப்படுத்திய புலித் தலைமையின் நடவடிக்கைகளும், புலிகளுக்கு துதிபாடி உயிர்ப்பிச்சை வாங்கிக் கொண்ட கூட்டமைப்பினரும் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை குழப்பியடித்தார்கள். அதுதவிரவும் அரசியல் தீர்வு விடயத்தை தீவிரமாக முன்னெடுப்பதற்கு ஈ.பி.டி.பிக்கு போதுமான அரசியல் பலம் கிடைத்திருக்கவில்லை.

இருந்தபோதும் 2001ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருடன் நாம் இணக்க அரசியல் நடத்தியபோது சிறந்த தீர்வுத்திட்டம் ஒன்று அவரால் முன்வைக்கப்படுவதற்கு எமது பங்களிப்பை வழங்கியதுடன், 19 பக்கத்தில் எமது மக்களின் அபிலாi~களை உள்ளடக்கிய பரிந்துரைகளையும் முன்வைத்தோம், அதையும் அந்த தீர்வு வரைபுடன் சந்திரிக்கா அம்மையார் இணைத்துக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நாம் இணக்க அரசியல் செய்தபோது யுத்தம் வெல்லப்பட்ட பின்னணியில், தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது என்று இனவாதிகள் கேட்டபோது, தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினை இருக்கின்றது என்றும், அதற்கு தீர்வாக 13 பிளஸ்,பிளஸை வழங்குவேன் என்று அவரை உச்சரிக்கச் செய்ததும், மாகாண சபையின் அதிகாரங்களை குறைத்துவிட்டே வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை அன்று ஆட்சியிலிருந்த ஒரு பகுதியினர் முன்வைத்தபோது அதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் 50 பேரின் கையொப்பங்களைப் பெற்று, மாகாணசபையின் அதிகாரங்களைக் குறைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினேன்.

அந்தந்த கால கட்டத்தில் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு சில தடைகள் இருந்தாலும், மத்தியில் அமைச்சராக இருந்ததால் சில வசதிகளும் இருந்ததால், யுத்தத்தில் சிதைந்து கிடந்த வடக்கை குறிப்பாக யாழ்ப்பாணத்தை மீண்டும் அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தினேன்.

அன்று நான் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்த கட்டிடங்களையே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திறந்து வைக்கின்றார்கள்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட 12000 முன்னாள் புலிகளை விடுவித்து சமூகத்துடன் இணைப்பதில் கனிசமான பங்களிப்பைச் செய்துள்ளேன். தவிரவும், படையினர் வசமிருந்த சுமார் 17000 த்திற்கும் மேலான ஏக்கர் நிலத்தை கட்டம் கட்டமாக மீளப்பெற்று மக்களிடம் ஒப்படைத்திருக்கின்றேன். அந்தக் காலத்தில் இராணுவ அதிகாரிகளாக யாழ்ப்பாணத்தில் கடமையாற்றியவர்களுக்கு நில விடுவிப்புத் தொடர்பான எனது கோரிக்கைள் தவிர்க்க முடியாத பேரழுத்தமாக இருந்ததாக அடிக்கடி கூறுவார்கள்.

எனது அந்த முயற்சிகளில் இறுதியாக கிளிநொச்சியில் முன்னர் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்து பின்னர் படையினரின் முகாமாக இருந்த அறிவியல் நகர் பகுதியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கைவிடுத்து அதைப் பெற்று அங்கே மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை அமைத்தும், விவசாய பீடத்தை அங்கே இடம் மாற்றியும் இயங்கச் செய்து, யாழ் பல்கலைக்கழகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதைக் கூறலாம்.

மீள்குடியேற்றம் தொடர்பில் கூறினீர்கள். என் மீது குற்றம்சாட்டும் இந்த பல தரப்பு என்பவர்கள் அக்கால கட்டத்தில் கோமாவில் இருந்தார்களோ தெரியவில்லை. மீள்குடியேற்றத்தில் அக்கறைக்குரிய பல வேலைத்திட்டங்களை செய்திருந்தாலும், 2011ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது நான் நேரடியாகவே அப்போதைய இந்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களிடம் கோரிக்கைவிடுத்து, அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் ஒப்புதல் வழங்கியதன் பேரில் பெற்றுக்கொள்ளப்பட்டதே 50 ஆயிரம் இந்திய வீட்டுத்திட்டமாகும். அந்த வீட்டுத்திட்டத்தையும், அதனால் எமது மக்களுக்கு மீள் குடியேற்றத்தில் கிடைக்கப்பெற்ற நன்மைகளையும் உரிமை கொண்டாடக்கூடிய அருகதை எனக்கு மட்டுமே இருக்கின்றது.

எனவே ஈ.பி.டி.பி காணிகளை விடுவிப்புச் செய்வதிலும், அரசியல் கைதிகளை விடுவிப்புச் செய்வதிலும், மீள் குடியேற்றத்திலும் எவ்வித அக்கறையும் காட்டவில்லை என்றும் கூறுவது மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் அல்லது கோமாவில் இருந்தவர்களின் குற்றச்சாட்டாகவே இருக்க முடியும்.

கேள்வி  புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் முனைப்பக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் உங்கள் கட்சி முன்வைக்கும் யோசனைகள் எவை?

 பதில் – நாம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக நாடாளுமன்ற ஜனநாயக வழிமுறை மீது நம்பிக்கை கொண்டு எமது மக்களின் அரசியல் உரிமை எனும் இலக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருப்பவர்கள்.

இலங்கையில் சட்டமாகவும், அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், நடைமுறையிலிருப்பதுமான 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து தமிழ் மக்கள் கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதை உறுதிப்படுத்தும், இறைமை பகிரப்படும் தீர்வையே நாம் தொடர்ந்தும் வழியுறுத்தி வருகின்றோம்.

கேள்வி கடந்த காலங்களில் வடக்கில் இடம்பெற்ற பல்வேறுபட்ட காணாமல் போதல்கள், கொலைகளின் பின்னணியில் ஈ.பி.டி.பி செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் நிலவியபோதும்நீங்கள் அதனை மறுத்தே வந்திருக்கின்றீர்கள். இந்நிலையிலேயே ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆயுதக் குழுவாக இருந்ததில்லை என்று நீங்கள் அன்மையில் அறிவித்திருக்கின்றீர்கள்.

பதில் – யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் சங்கம் அமைத்து, காணாமல் போதலைத் தடுத்தவர்கள் நாங்கள்தான். அதுபோல், செம்மணிப் படுகொலையை வெளி உலகுக்க அம்பலப்படுத்தி, அதுபோன்ற படுகொலைகள் தொடர்வதையும் நாமே தடுத்து நிறுத்தினோம்.

இதில் உங்களது கேள்வி தெளிவில்லாமல் இருக்கின்றது. ஈ.பி.டி.பி மீது சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருப்பது உண்மைதான். நாங்கள் அந்த முறைப்பாடு தொடர்பில் உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று கூறியிருக்கின்றோம். ஏன் என்றால் சிலர் அறியாமலும், தூண்டலின் பேரிலும் ஈ.பிடி.பி மீது முறைப்பாடுகளை பதிவு செய்திருக்கின்றார்கள். ஆகவே அவர்களின் முறைப்பாடுகள் தொடர்பில் காணப்படும் முரண்பாடுகள் தொடர்பில் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி வருகின்றோம். அன்மையில் கூட அரியாலையில் வைத்து தனது கணவனை ஈ.பி.டி.பி கடத்தியதாகக் கூறிய பெண்மணி என்னைச் சந்தித்து, அவ்வாறு ஆணைக்குழுவிடம் கூறியது தவறு என்றும் அந்தப் பொழுதில் அங்கு ஈ.பி.ஆர்.எல்.எப்பினரே அங்கு இருந்துள்ளனர். ஆனால் தனக்கு ஈ.பி.டி.பியினர்தான் அங்கு இருந்ததாக யாரோ கூறியதைக் கேட்டே அவ்வாறு முறைப்பாடு செய்ததாகவும் கூறினார். இக்குற்றச்சாட்டுக்கள் உரியவாறு விசாரணைக்கு உட்படுத்தப்படும்போது மேலும் பல உண்மைகள் வெளி வரும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறுதான் சில குற்றச்சாட்டுக்கள் எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆட்களைக் கடத்துவதிலும், கொலைகள் செய்வதிலும் படையினருடன் சேர்ந்து ஈடுபட்டவர்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைந்து தம்மை புனிதர்கள்போல் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். ஆட்களைக் கடத்துவதும், கொலைகள் செய்வதும், கொள்ளையடிப்பதும் ஈ.பி.டி.பியின் கொள்கையோ, வேலைத்திட்டமோ இல்லை. எம்மீது சுமத்தப்பட்ட பல பிரமுகர்களின் கொலைகள் தொடர்பில் தற்போது உண்மைகள் வெளிவருவதையும், குற்றவாளிகள் கைது செய்யப்படுவதையும் நாட்டு மக்கள் கண்முன்னே காண்கின்றார்கள்.

உங்களுக்குத் தெரியும், ஜே.வி.பி கால கட்டத்தில் அன்றைய அரசுகள் தென் இலங்கையில் இருந்த அரசியல் கட்சிகளுக்கு பாதுகாப்புக்கு ஆயுதங்களை வழங்கியதுபோல், புலித் தலைமையால் சக தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கு பாரிய உயிர் அச்சுறுத்தல் இருந்த காலத்தில் மாறி மாறி வந்த அரசுகள் பாதுகாப்பிற்காக ஆயுதங்களையும், வழங்கின, அவ்வாறு எமக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களையும் 2002ஆம் ஆண்டு புரிந்துணர் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து எமது கட்சி(ஈ.பி.டி.பி) மீண்டும் அரசிடம் கையளித்துவிட்டது. அதைத் தொடர்ந்து நிராயுதபாணிகளாக நின்றிருந்த பல தோழர்களை புலித் தலைமை கொலை செய்திருந்தது, பலரை காணாமல் போகச் செய்தது, பலரை காயமடையச் செய்தது, பலரை அச்சுறுத்தி நாட்டைவிட்டு புலம்பெயரச் செய்தது. பின்னர் படையினரே எமது பாதுகாப்புக்கும் அமர்த்தப்பட்டிருந்தார்கள். எனவே எக்கால கட்டத்திலும் நாம் ஆயுதக் குழுவாகவோ, துணைப்படையாகவோ செயற்படவில்லை. அன்மையில் அமைச்சர் ராஜித சேனாரத்தின அவர்கள் அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் ஈ.பி.டி.பி மீதான கடந்த கால குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மை இல்லை என்பதை தாம் இப்போது உணர்ந்து கொண்டிருப்பதாக கூறியிருப்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

கேள்வி கொலை, கொள்ளை, வாள்வெட்டு, போதைப்பொருள் பாவனை என வட புலத்து மக்கள் எப்போதும் அச்சம் நிறைந்த சூழலிலேயே வாழவேண்டியிருக்கின்றதே இதற்கு என்ன காரணம்? இது குறித்து காத்திரமான முயற்சிகள் ஏதும் இதுவரை ஏன் எடுக்க முடியாமல் உள்ளது.

பதில் – எமது மக்கள் அச்சத்துடனும், பிரச்சினைகளுடனும் வாழ்வதால் யாருக்கு அரசியல் இலாபம் கிடைத்திருக்கின்றது என்பதை ஆராய்ந்து பார்த்தால், போலித் தமிழ்த் தேசியம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கேயாகும். இன்றைய சூழலில் மாகாணசபையையும், நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்பதையும் பிரயோகித்து எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கவும், அவர்களின் எதிர்காலம் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தவுமான பணிகளை கூட்டமைப்பினர் முன்னெடுத்திருக்க வேண்டும்.

அரசில் பங்காளிகளாக இருந்து கொண்டு எமது மக்களுக்கு அரசியல் தலைமை தாங்குவதாகக் கூறிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பினர், எமது இளைஞர், யுவதிகளின் எதிர்காலம் தொடர்பாகவும், பொருளாதார மேம்பாடு தொடர்பாகவும் திட்டங்களை வகுத்து, அதைச் செயல்வடிவம் கொடுத்தும் சரியான பாதையை அவர்களுக்கு காட்டவேண்டும்.

அதைவிடுத்து தமக்கு அடியாட்களாகவும், தமது அரசியல் தேவைக்கான தெருச் சண்டியர்களாகவும், குழுக்களாகவும் அவர்களை பாவித்துக் கொண்டு, இவர்கள் அகிம்சாமூர்த்திகளைப்போல் வே~ம் தரித்துத் திரிகின்றார்கள்.

அன்மையில் கூட யாழ்ப்பாணத்தில் இயங்கிய வாள் வெட்டுக் குழுவான ஆவா குழு முக்கியஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் கஜேந்திரன் குமாரின் தமிழ்த் தேசிய முன்னணியின் உறுப்பினர் எனவும் செய்திகள் வெளியாகி இருந்ததை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

தமிழ் மக்களின் அச்சம் அகன்றுவிட்டால், அரசியல் பிரச்சினை தீர்ந்துவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் நடத்துவதற்கு முடியாமலிருக்கும். ஆகவே யார் மீதாவது பழியைப்போட்டு ஒரு பதற்றச் சூழலை பாதுகாக்கவே அவர்கள் முயற்சிப்பார்கள்.

 

Related posts:

துறைமுகம் அமைக்கப்பட்டால் மக்களின் வாழ்வியல் பறிபோகும் - டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர்கள் சுட்...
நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில் வீடுகள் இல்லாத மக்களுக்கு வீட்டத் திட்டங்கள் நிச்சயம் ...
மக்களின் நலன்களை பாதுகாக்கும் தனித்துவமான நாடாகவே இலங்கை இருக்கும் – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவ...