அன்புடன் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு…

Friday, January 19th, 2018

மீண்டும் ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், உங்களின் நியாயமான தீர்ப்புக்காக உங்களுடன் மனந்திறந்து சில கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ள முற்படுகின்றேன்.

1989ஆம் ஆண்டுக்குப் பின்னர் எமது தாயகப் பிரதேசத்தில் இயல்புச் சூழல் முடக்கப்பட்டுக் கிடந்ததையும், அரசியல் தலைமைகள் செயற்பட முடியாமல் இந்த மண்ணைவிட்டு வெளிநாடுகளுக்கும், தென் இலங்கைக்கும் ஓடியதையும், அரச இயந்திரம் இயங்க முடியாமல் போனதையும் உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். அவ்வாறான ஓர் இருண்ட சூழலிலேயே துணிச்சலோடு தேசிய நீரோட்டத்தில் நான் கலந்துகொண்டேன்.

அந்தச் சூனியச் சூழலையும், தடைகளையும் எதிர்கொண்டு, எமது தாயகத்தில் ஜனநாயகச் சூழலை ஏற்படுத்துவதற்கும், எமது மக்கள் இயல்புச் சூழலை அனுபவிப்பதற்கும் உயிர் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்தபடி நானே முன்னின்று உழைத்திருந்தேன்.மக்கள் சேவையை திறம்படச் செய்து முடிப்பதற்காக இரவு பகல் பாராமலும், நேர, காலம் பாராமலும், மழை, வெய்யில் பாராமலும் நான் செயல்பட்டபோது, எனக்கு உங்களின் ஆலோசனைகள் தேவையாக இருந்தன. உங்களின் பங்களிப்பும் தேவையாக இருந்தது. அதற்காக, எந்தவேளையில் நான் உங்களை அழைத்தாலும் நீங்கள் வருகை தந்து மனம் சோராமல் உதவி செய்தீர்கள்.

அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது பணியைச் செய்தாலும், அதை ஒரு சமூக சேவையாகவும், மனிதாபிமானப் பணியாகவும் நினைத்து மக்களுக்கு செய்ய வேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கை விடுத்ததையும், நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அத்துடன் நீங்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் செயல்பட உங்களுக்கு நான் பக்கபலமாக இருந்ததையும் நினைவில் கொண்டிருப்பீர்கள் என்றும் நம்புகின்றேன்.
உங்கள் பங்களிப்பும், உதவியும் கிடைக்கப்பெற்றதால்தான், யுத்த இடிபாடுகளாகக் கிடந்த யாழ். குடா நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடிந்தது. எனது அயராத முயற்சியினால்தான் வடக்கிலும், கிழக்கிலும் பல ஆயிரம் பேருக்கு அரச வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கவும் முடிந்தது. அந்த நன்றி உணர்வோடு இன்னும் பலர் இருப்பதையும் அன்போடு ஞாபகத்தில் வைத்திருக்கின்றேன்.
எமது மக்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நேரகாலம் பாராமல் நான் அரச அதிகாரிகளை அழைத்திருந்தேன் என்பதற்காகவும், மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு நியாயமான உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என்று பிடிவாதமாக கேட்டுக்கொண்டதற்காகவும் உங்களில் சிலர் அதிருப்தியடைந்திருப்பதாலேயே தபால் மூல வாக்குகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)க்கு கணிசமான வாக்குகள் கிடைப்பதில்லை என்று கூறப்படுவதை நான் உண்மையென்று நம்பவில்லை.

எமது மக்களுக்காகவே நான் பாடுபட்டேன். எமது மண்ணுக்காகவே உழைத்தேன். கடந்த மூன்று வருடங்களாக எனக்கு எதிரான சக தமிழ் அரசியல் கட்சிகள் செய்த சதி காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எமது மக்களும், அபிவிருத்தியற்று முடங்கிப்போனது எமது தாயகப் பிரதேசமும்தான். இப்பாதிப்பையும், பின்னடைவையும் எமது மக்கள் உணர்ந்து வருவதையும், அதை வெளிப்படுத்தி வருவதையும் நான் புரிந்து கொள்கின்றேன்.

இந்த முடக்கத்திலிருந்து அபிவிருத்தியும், மீள் எழுச்சியும் முழு வீச்சில் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். எதிர்காலம் மீதான நம்பிக்கையை எமது மக்களிடையே மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். சமூகச் சீர்கேடுகளை நிறுத்தி, அதனால் பாதிப்புக்குள்ளானவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். அதற்காக நீங்களும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீங்கள் கடந்த காலத்தில் எவ்வாறான தீர்மானம் எடுத்திருந்தாலும் பரவாயில்லை. இம்முறை நியாயத்திற்காக எனது கோரிக்கையை ஏற்று நியாயத் தீர்ப்பை எழுதுவீர்கள் என்று நம்புகின்றேன்.

முயல்வோம்! வெல்வோம்! உளம்சோரோம்!!

என்றும் மக்கள் சேவையிலுள்ள
டக்ளஸ் தேவானந்தா பா. உ
செயலாளர் நாயகம்
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)

Legal Letter 01

Related posts:

தேசிய நல்லிணக்கத்தைப் பாதிக்காதவகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும் -- டக்ளஸ் தேவானந்தா!
எதிர்கால சந்ததி ஒளிமயமாக வாழவேண்டும் என்பதற்காகவே கரடு முரடான பாதைகளைக் கடந்து உழைத்து வருகின்றேன் –...
தமிழ்நாடு மாநிலத்தின் கடற்றொழிலாளர்களுக்கான தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பொன்னாடை போர்த்த...