ஆசிரியர் சேவையில் முதலாம் வகுப்பினர் வேட்பாளராவதற்கான அனுமதி நிராகரிப்பு -கிழக்கு கல்வி அமைச்சு செயலர் தெரிவிப்பு

Wednesday, January 31st, 2018

உள்ளூராட்சித் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கை ஆசிரியர் சேவையின் முதலாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான அனுமதியை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நிராகரித்து கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.திசாநாயக்கா தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களின் தகைமையீனம் பற்றி தேர்தல் ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள சுற்று நிருபத்திற்கமைய மேற்படி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

2007 ஜீன் மாதம் முதலாம் திகதியன்று சம்பள அளவுத்திட்டத்திற்கமைய ஆரம்ப அடிப்படைச் சம்பளம் வருடாந்தம் 227, 280 ரூபா அல்லது மாதாந்த சம்பளமாக 18, 940 ரூபா பெறும் அல்லது அதற்கு பின்னரான சம்பள மாற்றம் காரணமாக மேற்படி தொகையை பெறும் ஆசிரியர்கள் மேற்படி தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளன.

2009 ஜனவரி மாதம் முதலாம் திகதியன்று சம்பள அளவுத்திட்டத்திற்கமைய ஆரம்ப அடிப்படை சம்பளமாக வருடாந்தம் 246,300 ரூபா அல்லது மாதாந்த சம்பளமாக 20, 525 ரூபாவை பெறும் அல்லது அதற்குப் பின்னரான சம்பள மாற்றம் காரணமாக மேற்படி தொகையைப் பெறும் கல்வித்துறை உத்தியோகத்தர்கள் மேற்படி தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது எனவும் அறிவித்துள்ளது.

இவ்வாறான உத்தியோகத்தர்கள் எவராயினும் சம்பளமற்ற லீவு கோரி விண்ணப்பிப்பதற்கு பதிலாக அவர்கள் ஓய்வு பெற்றோ அல்லது பதவியை இராஜினாமா செய்தோ தேர்தலில் வேட்பாளராக நிற்பதில் தடை எதுவுமில்லையெனவும் அறிவித்துள்ளார்.

Related posts: