அமெரிக்க இராணுவ விமானங்கள் வெனிசூலாவில்! சர்வாதிகார செயல் என்கிறார் ஜனாதிபதி!
Monday, February 18th, 2019வெனிசூலாவுக்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன், அமெரிக்க இராணுவ விமானங்கள் கொலம்பிய எல்லை நகரமான குகுடாவை அடைந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வெனிசூலா மக்கள், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் தம்மை தாமே நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகப் பிரகடனப்படுத்திய வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோவின் வேண்டுகோளுக்கு அமைவாக இவ்வாறு உதவிப்பொருட்களை வழங்குவதற்கு அமெரிக்கா இணங்கியுள்ளது.
இந்தநிலையில், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதில் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக, இடைக்கால ஜனாதிபதி குவைடோ தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளிலிருந்து மீளும் நோக்கில், 3 மில்லியனுக்கும் அதிக தொகை மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் இதனால் இலத்தீன் அமெரிக்காவில் பாரியளவு மக்கள் இடம்பெயர்ந்த நாடுகளின் பட்டியலில் வெனிசூலா முன்னிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரேஸில் மற்றும் கரீபியன் பகுதிகளில் உதவிப்பொருட்களை சேகரிக்கும் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், அமெரிக்காவின் சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான சதித்திட்டமாகவே, இவ்வாறு உதவிப் பொருட்கள் வழங்கப்படுவதாக, வெனிசூலாவின் ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
Related posts:
|
|