கடத்தப்பட்ட 101 பெண்கள் மீட்பு – பதற்றத்தில் குடும்பங்கள்!

Monday, February 4th, 2019

மணிப்பூரில் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில், ஆட்கடத்தல் கும்பலிடம் இருந்து 101 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மோரே எல்லை வழியாக, பெண்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், பொலிசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து எல்லைப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

மோரே எல்லையில் உள்ள ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில் 40 பெண்கள் மீட்கப்பட்டனர். இம்பாலில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து 61 பெண்கள் மீட்கப்பட்டனர்.

ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், அண்டை நாடுகளில் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

அவர்களை நேபாளத்தின் சுனௌலி நகரை சேர்ந்த ராஜீவ் ஷர்மா அனுப்பியிருக்கலாம் என டெங்குநோபுல் பொலிசாரால் சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து எல்லைப்பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டத்தை பொலிசார் கண்காணித்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட 101 பெண்களும் உஜ்வாலா காப்பகத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்கள் தெரிந்தவுடன் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related posts: