160 ரயில் பெட்டிகளில் 103 பயன்பாட்டில் இல்லை – காரணத்தை கண்டறிய “கோபா” குழு பணிப்பு!
Friday, July 8th, 2022இந்தியாவிலிருந்து விசேடமாக கொள்வனவு செய்யப்பட்ட 160 ரயில் பெட்டிகளில் 103 பெட்டிகள் இதுவரை பயன்படுத்தப்படாமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) கேள்வி எழுப்பியுள்ளது.
போக்குவரத்து அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலவரம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் (05) கூடியபோதே இவ்வாறு கேள்வி எழுப்ப்பட்டது.
2017ஆம் ஆண்டு இந்தியாவின் கடன் மானியத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டிருந்த ரயில் பெட்டிகள் பல வருடங்கள் காலதாமதமாகி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பிலும் கோபா குழு கவனம் செலுத்தியது. இதன்போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதிகாரிகளிடம் எழுப்பிய கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கும்போது, இந்நாட்டில் வக்கியூம் பிரேக் முறைமை பயன்படுத்தப்படுகின்ற போதும், சில பெட்டிகள் எயார் பிரேக் முறைமையைக் கொண்டிருப்பது இதற்குக் காரணமென தெரிவித்தனர்.
பொருத்தமில்லாத பிரேக் முறைமையைக் கொண்ட ரயில் பெட்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார்? என்பது தொடர்பில் கோபா குழுவின் அதிகாரிகள் வினவினர். இதற்கமைய அதிகாரிகள் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டுமென இங்கு குறிப்பிடப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, 2017 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் தயாரிக்கப்பட்ட இலங்கை ரயில்வே பிரதான திட்டத்துக்கு 1,056,555 அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளபோதும் இந்த நிதியுதவி அமைச்சின் வரவுசெலவுத்திட்டத்தில் அல்லது நிதி அறிக்கையில் உள்ளடக்கப்படாமை இங்கு புலப்பட்டது.
இதற்கமைய இது தொடர்பில் அறிக்கையொன்றை கோபா குழுவுக்கு வழங்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது. அத்துடன், ரயில்வே போக்குவரத்துக் கட்டமைப்பை புதிய தொழில்நுட்பத்துடன் இணைப்பது பற்றியும் கலந்துரையாடல் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|