விரைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திடம் கையளிப்பு தொடர்பான உடன்பாடு – மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம!

Thursday, November 17th, 2016

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் நிறைவேற்றப்படும் என அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

”ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் புரிந்துணர்வு உடன்பாடு வரும் ஜனவரி மாதம் கையெழுத்திடப்படும். இது தொடர்பான 95 வீதமான பணிகள் முடிவடைந்துள்ளன.  இம்மாத முடிவுக்குள்  புரிந்துணர்வு உடன்பாடு இறுதிப்படுத்தப்படும். தற்போது ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பெறுமதி, 1.3 தொடக்கம் 1.5 பில்லியன் டொலராக இருக்கக்கூடும்.

இந்த திட்டம்  கூட்டு முயற்சியாக மேற்கொள்ளப்படும். சீன மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு 80 வீத பங்குகள் வழங்கப்படும்.  மிகுதியை அரசாங்கம் வைத்துக் கொள்ளும். துறைமுகத்தை முகாமைத்துவம் செய்யும் மற்றும் இயக்கும் நடவடிக்கைகள் கூட்டு முயற்சியாகவே இடம்பெறும்.

ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மொனராகல மாவட்டங்களை இணைத்து, 15 ஆயிரம் ஏக்கரில் சிறப்பு பொருளாதார வலயம் உருவாக்கப்படும். இது குடியிருப்புகள், மருத்துவமனைகளைக் கொண்டதாக இருக்கும். தென் சீனாவில் உள்ள ஷென்சென் அபிவிருத்தித் திட்டத்தை ஒத்ததாக இது அமையும். ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பன, தற்போதைய அரசாங்கத்துக்கு முன்னைய ஆட்சியாளர்களால் விட்டுச் செல்லப்பட்ட மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. கப்பல்கள் வராத துறைமுகமாகவும், விமானங்கள் வராத விமான நிலையமாகவுமே இவை இருக்கின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

5

Related posts: