புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்கள் மற்றும் ஆணையாளர்கள் குழு வடக்கிற்கு வருகை – ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்சுகன் கலந்துரையாடல்!

Thursday, November 9th, 2023

வெளிவிவகார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வடமாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது  வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வடமாகாணத்தை அபிவிருத்தி செய்யவும் பல நீண்ட கால மற்றும் குறுகிய கால வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவற்றுள் வடமாகாணத்தில் 25,000 நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களின் முன்னாயத்த வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதகவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்திருந்தார்.

மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், மக்களின் அன்றாட நடவடிக்கைகள், அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநர் விளக்கமளித்தார்.

வடமாகாண மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் புதிய ஆணையாளர்களின் ஆதரவைப் பெறும் நோக்குடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கெளரவ ஆளுநரின் தலைமையில் மாகாண மக்களுக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டுவதாகவும், எதிர்காலத்தில் வடக்கின் அபிவிருத்திக்காக தாம் கடமை புரியும் நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் புதிய தூதர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி பயணிகள் படகு சேவைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டமை, எதிர்காலத்தில் மன்னாருக்கும் இந்தியாவிற்கும் இடையிலான படகு சேவைத்திட்டங்கள், மீன்பிடி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார நடவடிக்கைகள் போன்றவை பற்றியும், வடமாகாணத்தின் வளங்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் செய்யக்கூடிய சாதகமான ஆக்கபூர்வமான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய ஆளுநரின் நியமனத்தின் பின்னர், வடமாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு மீண்டும் பாராட்டு தெரிவித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், வடமாகாண அபிவிருத்திக்கு அந்தந்த நாடுகளிடமிருந்து அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர்.

000

Related posts: