வடக்கு மாகாண நாடாளுமன்றம் விரைவில் உருவாக்கப்பட வேண்டும் – மாகாண கல்வி செயலாளர்!

Wednesday, July 19th, 2017

தேசிய நிலை மாணவர் நாடாளுமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கூடவுள்ளதால் அதற்கு முன்னர் வடக்கு மாகாண மாணவர் நாடாளுமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாணவர்களின் கல்வி நிலையில் காணப்படும் அடைவுகளுக்குக் காரணங்களைக் கண்டறியும் செயற்பாடுகளைக் கருத்திற் கொண்டே கொழும்பு கல்வி அமைச்சு, மாணவர் நாடாளுமன்றங்களை உருவாக்கி அதன் மூலம் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், சமூகம் போன்றவற்றை உள்ளடக்கும் விதத்திலான செயற்பாடுகளை மேற்கொள்வதே நோக்கமாகக் கொண்டுள்ளது.

வகை 1 ஏபி 1சீ, வகை 11 பாடசாலைகளில் மாணவர் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டு செயற்படல் வேண்டுமென எமக்கு சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. தென்மராட்சி கல்வி வலயத்தில் கடந்த 3 வருடங்களில் உருவாக்கப்பட்டுள்ள 23 மாணவர் நாடாளுமன்றம் ஒவ்வொன்றும் சிறப்பாக இயங்குகின்றன. நிகழ்வில் மாணவர்கள் முன்மொழிந்த கருத்துக்கள் எல்லாம் பாடசாலைகளின் தேவைகளைச் சுட்டிக்காட்டுவனவாகக் காணப்பட்டன. கல்வி அமைச்சின் 21ஆம் நூற்றாண்டு கல்விக் கொள்கையின் பிரகாரம் மாணவர்கள் ஆழமாகக் கற்றல் மற்றும் கற்றலுக்கூடாக தலைமைத்துவத்தை வளர்த்தல் போன்றவையை மேம்படுத்த மாணவர் நாடாளுமன்றங்கள் பெரிதும் உதவும் என வடக்கு மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சி கல்வி வலயங்களில் வலய நாடாளுமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏனைய கல்வி வலயங்களில் விரைவில் வலய நிலை நாடாளுமன்றங்கள் அமைக்கப்படல் வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாகாண கல்வித் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வலய மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தலா 2 உறுப்பினர்கள் தெரிவு செய்ய்பட்டு 24பேர் வடக்கு மாகாணத்திலிருந்து தேசிய மாணவர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். என்றார்.

Related posts: