மீண்டும் முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்!

Tuesday, December 6th, 2016

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை (டிச. 6) அதிகாலை 1 மணி அளவில் பொறுப்பேற்றார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், மறைந்த ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அதே 31 பேர் மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.  முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பிற அமைச்சர்களுக்கும் பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் செய்து வைத்தார்.
சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக…:முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்ற பிறகு, 31 அமைச்சர்களும் ஒரே நேரத்தில் கூட்டாகப் பொறுப்பேற்றனர். முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கூடினர். கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களும் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றனர். பதவியேற்பு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசின் பொதுத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே செய்திருந்தனர்.
மௌன அஞ்சலி: பதவியேற்பு நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக, ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிஷங்கள் மௌனம் கடைப்பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பதவியேற்பு நிகழ்வு நடந்தது. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து, திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, கே.பி.அன்பழகன் என ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அனைத்து அமைச்சர்கள் கூட்டாக மொத்தமாக பதவியேற்றுக் கொண்டனர்.
மூன்றாவது முறையாக முதல்வர்: அதிமுக தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்ட இரண்டு தருணங்களில் முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், அந்த நெருக்கடிகள் தீர்ந்த பிறகு முதல்வர் பொறுப்பை மீண்டும் ஜெயலலிதாவிடமே ஒப்படைத்திருக்கிறார்.
2001-இல் டான்சி வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க நேர்ந்தது. அப்போது, முதல் முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றார் ஓ.பன்னீர்செல்வம். இதைத் தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டில் பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக தனது முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க நேர்ந்தது. அப்போது, இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார் ஓ.பன்னீர்செல்வம்.
இப்போது, முதல்வர் ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து, முதல்வர் பொறுப்பை மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுள்ளார். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் பல முக்கிய துறைகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சராகப் பணியாற்றியவர். பொதுப்பணித் துறை, நிதித் துறை ஆகிய பொறுப்புகளுடன் சட்டப் பேரவை பொறுப்பான அவை முன்னவர் பொறுப்பையும் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஜெயலலிதா தொடர் மருத்துவ சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது துறையின் பொறுப்புகள் அனைத்தும் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதியில் இருந்து ஜெயலலிதா வகித்த பொறுப்புகளை அவர் கவனித்து வந்தார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அவர் மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

pannerselvam

Related posts: