வடக்கில் உள்ள சிலர் தமது தேவைக்கேற்ப மக்களை குழப்புவது போன்று தெற்கிலும் சில உள்ளனர் – 13 ஐ கொடுத்தது பறிப்பதற்கு அல்ல – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, January 31st, 2022

வடக்கில் உள்ள சிலர் தமது தேவைக்கேற்ற வகையில் கருத்து வெளியிட்டு மக்களை குழப்புவது போன்று தெற்கிலும் சில உள்ளார்கள். அது அவர்களின் வேலை என சுட்டிக்காட்டியுள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி 13 ஆவது திருத்தச்சட்டம் என்னும் அரசியலமைப்பினூடாக மாகாண சபை முறைமையை வழங்கிவிட்டு அதை பறிப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – இலங்கை அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச்சட்டம் உள்வாங்கப்பட்டிருக்கின்ற நிலையில் புதிய அரசியலமைப்பை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.

புதிய அரசியலமைப்பு எதிர்வரும் மார்ச் மாதமளவில் அதன் பணிகள் நிறைவடைந்து ஜனாதிபதிக்கு வழங்கப்படுவதோடு அதன் பின்னர் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இலங்கை அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் ஏற்படுத்தப்பட்டு சுமார் 35 வருடங்களை கடந்துள்ள நிலையில் சில மாற்றங்களை செய்வதற்கு உத்தேசித்துள்ளோம்.

இதேநேரம் கொழும்பு ஊடகம் ஒன்றில் 13 ஆவது திருத்தத்தை புதிய அரசியலமைப்பில் நீக்கப்படவுள்ளதாக வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பான விடையம்.

எனக்கோ ஜனாதிபதிக்கோ 13 ஆவது திருத்தத்தை புதிய அரசியலமைப்பிலிருந்து முற்றாக நீக்க போவது தொடர்பில் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

வடக்கில் உள்ள சிலர் தமது தேவைக்கேற்ற வகையில் கருத்து வெளியிட்டு மக்களை குழப்புவது போன்று தெற்கிலும் சில உள்ளார்கள். அது அவர்களின் வேலை.

யார் வேண்டுமானாலும் புதிய அரசியலமைப்புக்கான தமது பரிந்துரைகளை முன் வைக்க முடியும் என நாம் கூறியிருந்தோம் அதனடிப்படையில் கருத்துக்களை முன்வைக்க எவருக்கும் உரிமை உள்ளது.

மாகாணசபை நீக்க வேண்டுமா அல்லது இருக்க வேண்டுமா என்பது மக்களுடைய பிரச்சினை அல்ல அது அரசியல்வாதிகளுக்கே பிரச்சினையாக உள்ளது .

கடந்த வடக்கு மாகாண சபையை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாததால் பல மில்லியன் ரூபாய்கள் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் பயன்படுத்தாமல் மத்திக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

சில அரசியல்வாதிகள் தமது அரசியலை தக்க வைத்துக்கொள்வதற்கே 13 ஐ வைத்து  மக்களை குழப்பி வருகிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பல வருடங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள் அவர்களுடன் நான் சந்தித்த போது அவர்களின் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்தேன்.

அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அரசாங்கம் என்ற வகையில் தீர்வை வழங்க நாம் தயாராக இருக்கிறோம் ஆனால் அவர்களையும் அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக தெருத்தெருவாக போராட்டம் நடத்த வைக்கின்றார்கள்.

ஆகவே தமிழ் இளைஞர்களை சில அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்துகிறார்கள்.  நீங்கள் அவர்களின் வலையில் சிக்காமல் உங்கள் எதிர்காலத்தை சிறந்த முறையில் அமைத்துக் கொள்ளதே சிறந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: