வடக்கில் அரசியல் மயமாக்கப்படும் கல்விக் கட்டமைப்பு – ஆபத்து என குற்றம்சாட்டுகின்றது இலங்கை ஆசிரியர் சங்கம்!

வடக்கு மாகாணத்தின் கல்விக் கட்டமைப்பு முழுவதுமாக அரசியல் மயமாகி வருவது ஆபத்தானதாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
வடமாகாணத்தில் கல்வி வலயங்களினதும் பாடசாலைகளினதும் நிர்வாகக் கட்டமைப்புக்களை சீர்குலைக்கும் வகையில் அரசியல்வாதிகளாலும் ஒரு சில கல்வி அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் வடக்கில் தலைதூக்கியுள்ளன.
இது வடமாகாணத்தின் கல்வி நிர்வாகக் கட்டமைப்புக்களையும் தாபன விதிகளையும் மீறி செயற்படும் முறையற்ற நிலைக்குச் சென்றுள்ளது.
இதைக் கவனிக்க வேண்டிய தலைமைகளும் பொறுப்பேற்று செயற்பட்டு தமது அரசியல் இருப்பை பலப்படுத்துவதையே முதன்மையாகக் கொண்டு செயற்படுவது கல்விச் சமூகத்தை நம்பிக்கை இழக்க வைத்திருக்கின்றது.
அரசியல் பிரமுகர்களின் பிரத்தியேகச் செயலர்களால் இடமாற்றம் வழங்குவதும் அதிபர்களை ஒன்றிணைத்து கூட்டங்கள் நடத்த முயல்வதும் பிரதேச நலன் எனக் கூறிக்கொண்டு ஒரு சிலரின் தனிப்பட்ட நலன்களை கவனிப்பதுமாக வடக்கு மாகாணத்தின் கல்விக் கட்டமைப்பு முழுவதுமாக அரசியல் மயமாகி வருவது ஆபத்தானதாகும். இதனைத் தெரியப்படுத்தியும் முறைகேட்டின் தாற்பரியம் உணராத அரசியல் வாதிகளின் அசமந்தம் மிகமிக ஆபத்தானதாகும்.
சில கல்வி வலயங்களில் ஓய்வுபெற்ற கல்விநிர்வாக சேவை உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் வடமாகாண கல்வி அமைச்சு நியமித்துள்ளது. பிரச்சினைகள் ஏற்படும்போது சட்டரீதியாக பொறுப்புக்கூற அவசியமற்ற இவ்வாறானவர்கள் வலயக்கல்விப் பணிப்பாளருக்கும் கட்டுப்படாதவர்களாகக் கல்வி வலயங்களில் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். தமது தனிநபர் நலன்களுக்காக அந்தப் பிரதேசத்தின் கல்வியைச் சீர்குலைக்க முயல்வதும் எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடமாகாணத்தில் போதிய கல்விநிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் உள்ள நிலையில் ஒப்பந்த உத்தியோகத்தர்களின் ஒப்பந்தங்களும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
வடக்கு மாகாணத்தின் கல்வி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றுள்ளது.
Related posts:
|
|