ரோம் பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்!
Tuesday, January 24th, 2017பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக இல்லாதொழிக்குமாறும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், இலங்கை அரசாங்கத்திடம், ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் வலியுறுத்தியுள்ளார்.
சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான, மனிதமாபிமானமற்ற, அல்லது இழிவுபடுத்தும் நடவடிக்கைகள், தண்டனைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான, ஜுவான் மென்டஸ் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
2016 ஏப்ரல் 29ஆம் நாள் தொடக்கம், மே 7ஆம் நாள் வரை இலங்கையில் மேற்கொண்ட பயணத்தின் போது கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக வரையப்படும் புதிய சட்டத்தில், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் சட்டவாளரை சந்திக்க அனுமதிக்க முன்னர் வாக்குமூலம் பெற வழிவகுக்கும் முன்மொழிவும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
சித்திரவதை குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்து வழக்குத் தொடுப்பதற்கான பணியகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். குற்றமிழைத்தவர்கள் தப்பித்துக் கொள்ளும் கடந்தகால கலாசாரத்தில் இருந்து விடுபட்டு, இந்தப் பணியகம் சுதந்திரமாகச் செயற்படுவதை சட்டமா அதிபர் பணியகம் உறுதிப்படுத்த வேண்டும்.
தேசிய பாதுகாப்பு படைகளில் அங்கம் வகிப்பவர்களை விலக்கி, சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் திட்டம் காத்திரமான வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை அங்கீகரிக்கும் ரோம் பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும். அரசு அதிகாரத்துக்கு எதிராக குறிப்பாக, அதன் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக, குறைந்தபட்ச பாதுகாப்பு உத்தரவாதமற்ற நிலையிலேயே இலங்கை மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
தற்போதைய சட்ட வரைமுறை, மற்றும் ஆயுதப்படைகள், காவல்துறை, சட்டமாஅதிபர் பணியகம் மற்றும் நீதித்துறை கட்டமைப்புகளில் போதிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாமையால், சித்திரவதைகள் நீடித்து நிலைத்திருக்கும் ஆபத்து உள்ளது எனவும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஜுவன் மென்டஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
|
|