உயர்தர பரீட்சை – தேசிய அடையாள அட்டையற்றவர்களும் தோற்ற முடியும்!

Tuesday, July 30th, 2019

நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வசதிகள் இருப்பதாக பிரதி பரீட்சை ஆணையாளர் எம்.ஜீவராணி தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான சாரதி அனுமதி பத்திரம் அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்பிப்பதன் மூலம் பரீட்சார்த்திகள் தனது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர் மற்றும் வலயக்கல்வி பிரதி பணிப்பாளரினால் ஆள் அடையாளம் உறுதி செய்யப்பட்ட 2 புகைப்படத்துடன் பரீட்சைக்கு தோற்ற முடியும்.

இதே போன்று பரீட்சைக்கான குறிப்பிட்ட ஆள் அடையாளத்தை உறுதி செய்ய முடியாத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரினால் உறுதிசெய்யப்பட்ட 2 புகைப்படங்களுடன் பரீட்சைக்கு தோற்ற முடியும்.

கடந்த வருடம் பரீட்சை தொடர்பில் மாணவர்கள் கொண்டிருந்த அழுத்தத்தை குறைப்பதற்கு 3 மணித்தியாலங்களை கொண்ட வினாப்பத்திரங்களுக்கு விடையளிப்பதற்காக மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டடிருந்தது.

இந்த ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்த அவர் சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் துணையுடன் பொலிஸ் மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்கு மத்தியில் பரீட்சைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை கருத்தில் கொண்டு பரீட்சார்த்திகள் 30 நிமிடத்துக்கு முன்னர் பரீட்சை நிலையத்துக்கு சமூகமளிப்பது பொருத்தமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு செய்வதன் மூலம் பரீட்சை ஆரம்பிக்கும் தருணத்தில் வருகை தருவதன் மூலம் பதற்ற நிலைக்கு உள்ளாவதை தவிர்துக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனுமதி அட்டை தொடர்பில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்து தமது அனுமதி அட்டையை பெற்றுக் கொள்ள முடியம்.

விஷேட தேவைகளை கொண்ட பரீட்சார்த்திகள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் மாணவர் தரப்பில் இவ்வாறான விஷேட தேவைகளை கொண்டோர் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் போது அது தொடர்பான விபரங்களையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் இவர்கள் பரீட்சை எழுதுவதற்கு தேவையான வசதிகளை செய்வதற்கு திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த வருடம் இவ்வாறான விஷேட தேவைகளைக் கொண்ட மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

ஆள்மாறாட்டம் மற்றும் பரீட்சை தொடர்பான மோசடிகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் பரீட்சை நிலையங்களில் கடுமையான மேற்பார்வை ஒழுங்குகளும் இடம்பெறவுள்ளன.

பரீட்சை மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களது பரீட்சை பெறுபேறுகள் இரத்து செய்யப்படும். இவ்வாறானோர் இலங்கை பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சைகளிலும் 5 வருடங்களுக்கு தோற்ற முடியாது.

இந்த வருடம் க.பொ.த உயர்தர பரீட்சை நாடு முழுவதும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வாழ்க்கையை தீர்மானிப்பதற்கான இறுதி பரீட்சையாக உயர்தர பரீட்சை அமைந்திருப்பதாகவும் இந்த வருடம் 3,25,000 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்றும் பிரதி பரீட்சை ஆணையாளர் பிரனதாஸ தெரிவித்துள்ளார்.

பழைய பாடத்திட்ட மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பழைய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சை எழுதும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களை இலகுவாக அடையாளம் காணுவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம் முறை இவற்றை இனங்காணுவதற்கு வசதியாக அனுமதி அட்டைகள் இரண்டு நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. பழைய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு றோஸ் நிறத்திலும் புதிய பாடத்தின் கீழ் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு வெள்ளை நிறத்திலும் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் www.doenets.lk மூலம் தரவிறக்கம் செய்யப்படும் பரீட்சை அனுமதி அட்டைகள் வெள்ளை நிறத்தில் அமைந்திருக்கும். இதனை பயன்படுத்துவதில் எந்த பிரச்சினைகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதே வேளை இவ்வாறான வேறுபட்ட பாடத்திட்டங்களுக்கு தோற்றும் பரீட்சார்த்திகளின் வசதி கருதி பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பழைய பாடத்திட்ட பரீட்சை நிலையங்களில் றோஸ் நிறத்திலான சுவரொட்டிகளும் புதிய பாடத்திட்ட பரீட்சை நிலையங்களில் வெள்ளை நிறத்திலான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கு எந்த விதமான வயது எல்லைகளும் கிடையாது என்று பிரதி பரீட்சை ஆணையாளர் எம்.ஜீவராணி குறிப்பிட்டார்.

13 வருட கட்டாயக் கல்வி தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் பாடசாலையிலிருந்து வெளியேறும் மாணவர்களின் இடை விலகலை தடுத்து மாணவர்களை தொழில் ரீதியாக திசைப்படுத்துவதே 13 வருட கல்வியின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவர்கள் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்ற முடியாது 13 வருட கல்விக்கும் உயர்தரத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறினார்.

பரீட்சை நிலையங்களுக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பில் பரீட்சார்த்திகள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்கள் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையுடன் வழங்கப்படுள்ளது.

Related posts: