குடாநாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்திக்கும் டக்ளஸ் தேவானந்தாவே உரிமையாளர் – முன்னாள் MP வி.கே.ஜெகன்

Saturday, June 11th, 2016

நாம் இதுவரை இழந்தவற்றை உடனடியாக மீளப்பெற்றுக்கொள்வதென்பது நடைமுறையில் சாத்தியமாகாது. அதனால் எமது இன்றைய கால தேவைகளுக்கேற்ப  பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து வகையான உதவிகளையும் பெற்று வாழ்வியலை மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்  என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்துள்ளார்.

அனலைதீவு பகுதிகளில் வாழும் மக்கள் தமது வாழ்வாதாரம் மற்றும் தேவைகள் என்பவற்றை பெற்றுக்கொள்வதற்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்து கலந்துரையாடல் ஒன்றை இன்றையதினம் (11) மேற்கொண்டுள்ளனர். இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

நாம் எத்தகைய தீர்வுகளை பெற்றுக்கொண்டாலும் அவற்றை இலங்கை அரசினதும் தென்னிலங்கை மக்களினதும் ஆதரவுடன்தான் பெற்றுக்கொள்ளமுடியும். தவிர எமது மக்களுக்காக  கிடைக்கப்பெறுகின்றவற்றை அரசியல் காழ்ப்புணர்வுகளாலும் சுயநலன்களாலும்  தட்டிக்கழித்துவந்த காலத்தை மறந்து புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒன்றுபட்டவர்களாக உழைக்கவேண்டும்.

உங்களது பகுதிக்கு மட்டுமல்ல குடாநாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்திக்கும் சொந்தக்காரன் என்ற உரிமைகொள்ளும் அதிகாரம் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மட்டுமே உரித்தாகும். ஆனால் அவரது மக்களது பணிகளை மறைக்கும் செயற்பாடுகளை அற்பத்தனமான முறையில் கூட்டமைப்பினர் மறைத்து வருகின்றனர்.

குடாநாட்டின் கட்டுமானங்களானாலும் சரி வாழ்வாதார மேம்பாடானாலும் சரி அனைத்தையும் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்த எமது பதிவுகளை கூட வரலாற்றிலிருந்து மறைத்துவிட முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்கள் எதை செய்தாலும் எமது மக்களின் மனங்களிலிருந்து அவற்றை அழித்துவிட முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி தமது கோரிக்கைகளை முன்வைத்த குறித்த பகுதி மக்கள் கடந்த காலத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்தபோது தமக்கான தேவைகள் அபிவிருத்திகளை பெற்றுத்தந்திருந்தார். ஆனால் ஆட்சி மாற்றம் நடைபெற்றதன் பின்னர் எமது பகுதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்து செல்கின்றனரே தவிர எமக்கான வாழ்வியல் தேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை செய்யாது எம்மைவைத்து அரசியல் செய்வது வேதனையளிக்கின்றதென குறித்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் தற்போது எமது பகுதிக்கு தேவையாகவுள்ள வீதி புனரமைப்புகள் வீட்டுத்திட்டங்கள், மின்சாரம், குடிநீர் பிரச்சினை என்பவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறு மக்களால் வலியுறுத்தப்பட்டது. மக்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் குறித்த  கோரிக்கைகள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஊர்காவற்றுறை பிரதேச கட்சியின் நிர்வாக செயலாளர் காந்தன், மற்றும் புவி, குமார் ஆகியோருடன் அனலதீவு பகுதி மக்களும் மத தலைவர்களும் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13

2 south1

Related posts: