அறிக்கையை விவாதித்த பின்னர் சட்டமா அதிபரிடம் கையளிப்பு!

Sunday, October 30th, 2016

மத்தியவங்கி தொடர்பான கோப் குழுவின் விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதித்த பின்னர் அதனை சட்டமா அதிபருக்கு ஆற்றுப்படுத்தி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்லவில்லை. திருமணமொன்றுக்குச் சென்றுள்ள அவர் அதனை முடித்துக்கொண்டு நாடு திரும்புவார் என்றும் கூறினார்.

கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி திறைசேரிமுறி விநியோக விசாரணை அறிக்கை சமர்ப்பித்த பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் விசேட விடயமொன்று தொடர்பில் கோப் குழு விசாரணை நடத்தி அறிக்கையொன்றை சமர்ப்பித்திருப்பது நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்ட பிரதமர், நீண்டகாலமாக பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் எனப் போராடிவரும் நிலையில் இது பாராளுமன்றத்துக்கு வெற்றியாக அமைந்துள்ளது என்றார்.

“பெரும்பாலான கள்வர் கூட்டத்தினர் தற்பொழுது நல்லாட்சிக்கு மாறியுள்ளனர். அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது பாராளுமன்றத்தை பாதுகாக்கத் தவறியிருந்தாலும் தற்பொழுது நல்லாட்சியின் காவலர்களாக மாறியுள்ளனர்” எனவும் தெரிவித்தார்.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பில் கோப் குழுவின் தலைவருக்கும் அதன் ஏனைய உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். வரவுசெலவுத் திட்டத்துக்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கோப் குழுத் தலைவர் கேட்டதற்கு நாம் இணங்கியிருந்தோம். தலைவர் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டிருந்தோம்.

கோப் குழு விசாரணை நடத்தி பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இது பிரச்சினைக்குரிய விடயம் அல்ல. ஆளும் கட்சியில் உள்ள பங்காளிக் கட்சிகளுடன் பேசும்போதுகூட பரிந்துரைகளை நிறைவேற்றுவோம் என்பதை உறுதிபடத் தெரிவித்திருந்தோம்.

அறிக்கை வந்த பின்னர் அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பில் சபையில் பேசித் தீர்மானிக்கலாம். இவ்வாறான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கக் கிடைத்திருப்பது எமக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுவதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் குழு நிலை முறைமை மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழு முறை என்பவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இதனைச் செய்யுமாறு நாம் கோரியபோதும் நீங்கள் அதனைச் செய்யவில்லை. தற்பொழுது நாம் அதைச் செய்து காட்டியுள்ளோம்.

எனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனமொன்று தொடர்பிலேயே அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை முதலில் அச்சிடுவோம். அதன் பின்னர் ஆராய்ந்து விவாதிப்போம். பாராளுமன்றத்தில் விரிவாக விவாதித்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமா அதிபருக்கு ஆற்றுப்படுத்துவோம் என்றார்.

கிறீஸ் திறைசேரி முறி மோசடி தொடர்பில் தேடிப்பார்த்திருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. யார் தவறிழைத்திருந்தாலும் அது பற்றி நாம் தேடுவோம். இறுதியில் திருடர்களையும் நல்லாட்சிக்கு மாற்றியுள்ளோம் என்றார்.

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்லவில்லை. திருமணமொன்றில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு செல்வதாக முன்னரே அறிவித்திருந்தார். அதனை முடித்துக் கொண்டு நாடு திரும்புவார். உதயங்க வீரதுங்கவைப் போல அவர் தப்பியோடவில்லை என்றார்.

55_28102016_kaa_cmy

Related posts: