யானை வேலிகளை பராமரிக்கும் தன்னார்வ படையணியின் திட்டத்தை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்பு!

Wednesday, July 14th, 2021

காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கமைய யானை வேலிகளை பராமரிப்பை சமூகத்தினரின் பங்களிப்பு மற்றும் உள்ளூர் பங்குதாரர்களின் பங்களிப்புடன் தன்னார்வ படையணியிடம் வழங்கும் ஆரம்ப திட்டத்தை குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலிருந்து ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ துறைசார் தரப்பினருக்கு பணித்துள்ளார்.

காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலிகளை  அமைப்பது தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு அல்லது சிவில் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு மாத்திரம் இதன் ஒட்டுமொத்த பொறுப்பும் சுமத்தப்படாத வகையில் பிரதேச செயலாளர் அலுவலகம், விவசாய சேவைகள் திணைக்களம், மகாவெலி அதிகாரசபை, மற்றும் கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் கிராம சமூக அமைப்புகள் உள்ளிட்ட தன்னார்வ படையணிகள் ஊடாக இந்த யானை – மனித மோதலை கட்டுப்படுத்த முடியும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் தேசிய வேலைத்திட்டமாக 1500 கிலோமீற்றர் மின்சார வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை அதற்கான மூலப்பொருள் கொள்வனவு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், 19 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் முப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், பிரதேச வனஜீவராசிகள் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் என்பன யானை வேலி அமைப்பதற்கு பங்களிப்பு செய்துள்ளது.

இதுவரை அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 500 கிலோமீற்றர் வரையான யானை வேலிகளை பராமரிப்பதற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 3900 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பல்நோக்கு மேம்பாட்டு திணைக்களத்தின் 1500 பேரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: