மூன்றாவது அலை மிக மோசமான விளைவுகளுடன் ஆரம்பம் – கட்டுப்படுத்த நாட்டு மக்கள் உச்ச அளவு ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியம் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி வலியுறுத்து!
Thursday, May 13th, 2021கொரோனா தொற்றின் மூன்றாவது அலை மிகவும் எச்சரிக்கை மிகுந்ததாக காணப்படுவதால் அதனைக் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு உச்ச அளவு ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை மூன்றாவது அலை மோசமான விளைவுகளுடன் ஆரம்பித்துள்ளது. வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு குடும்பத்திலுள்ளவர்களும் தமது குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு எளிதாக அமையுமென்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் –
27 நாட்களுக்குள்ளாகவே கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் வேகமான அதிகரிப்பும் மரணங்கள் அதிகரிப்பும் இடம்பெற்றுள்ளன.
இரண்டாவது அலை போன்று அல்ல, இது மிக வேகமாகப் பரவக் கூடியதென்பதால் அதிகமானோர் தொற்றுக்குட்படும் அபாயம் உள்ளது.
தடுப்பூசிகளுக்கு உலகளவில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. பணம் படைத்த நாடுகள் ஏற்கனவே அவற்றைப் பெற்று களஞ்சியப்படுத்திக் கொண்டுள்ளன என்பதால் எம்மால் தடுப்பூசிகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.
அதேநேரம் எதிர்வரும் மூன்று, நான்கு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக செயற்பட்டு வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு நாம் மீண்டும் மீண்டும் நாட்டு மக்களை தயவாக கேட்டுக்கொள்கின்றோம்.
இப்போதைக்கு தேவையான வைத்தியர்கள் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், வைத்தியசாலை வசதிகள் உள்ளன. எனினும் தொடர்ச்சியாக நோயாளிகள் அதிகரித்தால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.
அதேநேரம் எந்தத் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு பெற்றுக் கொள்பவர்கள் மரணம் வரை செல்வதை தடுப்பதற்கு தடுப்பூசிகள் பெரிதும் உதவும். தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டாலும் சுகாதார வழிகாட்டல்களை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது மிக மிக அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|