மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டுக்கு ஓரிரு தினங்களுக்குள் தீர்வு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நம்பிக்கை!

Sunday, June 5th, 2022

நாட்டில் தற்போது நிலவும் மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் ஓரிரு தினங்களில் நுகர்வோருக்கு மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொடுக்க முடியும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ன.

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மண்ணெண்ணெய்யை ஓரிரு தினங்களில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மண்ணெண்ணெய் கையிருப்பு இல்லை என்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் அந்த நிறுவனம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும் நேற்றையதினம் மண்ணெண்ணையை கொள்வனவு செய்வதற்காக பெருமளவு மக்கள் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நின்றதை காண முடிந்தது. கடந்த சில தினங்களாக அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, உலக சந்தையில் நேற்றையதினம் எரிபொருளின் விலை சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே 31 ஆம் திகதி 124 டொலராக அதிகரித்திருந்த ப்ரேண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை நேற்றுமுன்தினம் 117 டொலராக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் கடந்த மாதத்தில் உலக சந்தையில் எரிபொருளின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: