பாதிக்கப்பட்ட அனைவரும் மினுவாங்கொடை கொத்தணியை சேர்ந்தவர்கள்- சமூகத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Saturday, October 10th, 2020

கொரோனா தொற்றுடன் நாட்டில் தற்போது அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றாளர்கள் அனைவரும், மினுவாங்கொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூகத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சவேந்திர சில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது –

மினுவாங்கொடை கொத்தணியை சேர்ந்த 1083பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இந்த நோய்த்தொற்றுடன் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் காணவும், அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாணத்துறை வைத்தியசாலையில் பணிப்புரிகின்ற தாதியர் ஒருவரின் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையினை தொடர்ந்து, வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவு, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில் நேற்று மாத்திரம் 7196.பி.சி.ஆர்.சோதனைகள், இலங்கையில் நடத்தப்பட்டுள்ளன. ஒரே நாளில் நாட்டில் நடத்தப்பட்ட பி.சி.ஆர்.சோதனைகளில் இதுவே அதிக எண்ணிக்கையாகும் என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4523 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 13பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: