நாளை பிரதமர் மோடி பதவியேற்பு – புதுடெல்லியில் ஒன்றுகூடும் அயல் நாடுகளின் தலைவர்கள்!

Saturday, June 8th, 2024

2024 பொதுத்தேர்தல்களை தொடர்ந்து பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு வைபவம் நாளை (09) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்காக, இந்தியாவின் அயல்நாடுகள் மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் தலைவர்கள் விசேட விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முஹம்மது முயிசு, சிசெல்ஸ் துணை ஜனாதிபதி அகமத் ஆபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா, மொரிசியஸ் பிரதமர் பிரவீந் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமால் தஹல் பிரசண்டா மற்றும் பூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளும் தலைவர்கள் அன்றையதினம் மாலை இராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ஶ்ரீமதி திரௌபதி முர்முவினால் வழங்கப்படும் விருந்துபசாரத்திலும் பங்கேற்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்திற்கான பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இத்தலைவர்கள் வருகை தருகின்றமை, இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் சாகர் கோட்பாடு ஆகியவற்றுக்கு இந்தியாவால் வழங்கப்படும் உயர் முன்னுரிமையின் அடிப்படையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்பதாக மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கூட்டணி பலத்துடன் பாஜக ஆட்சிஅமைக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17 ஆவது மக்களவையை கலைக்க பரிந்துரைத்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தையும், 17 ஆவது மக்களவையை கலைப்பதற்கான அமைச்சரவை கூட்டத்தின் பரிந்துரையையும் குடியரசுத் தலைவரிடம் வழங்கினார்.

அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், புதிய அரசு அமையும் வரை பதவியில் தொடருமாறு பிரதமரையும், மத்திய அமைச்சரவை குழுவையும் கேட்டுக் கொண்டார்.

பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான், மஜத தலைவர் எச்.டி. குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில்,பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைய, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்டோர் நிபந்தனையற்ற ஆதரவு கடிதத்தை பிரதமர் மோடியிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: