சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்திலிருந்து பலப்படுத்த நடவடிக்கை – துறைசார் தனர்பினருக்கு ஜனாதிபதி உத்தரவு!

Friday, August 6th, 2021

சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்திலிருந்து பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் துறைசார் நிறுவனங்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில்  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களை பணிக்கமர்த்துவது தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்களுக்கு ஏற்ப, அவர்களில் அதிக சதவீதமானவர்கள் பெருந்தோட்டப் பகுதி சிறுவர்கள் என்றும் இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்குத் தேவையான அதிகாரம், கிராம அதிகாரி மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களின் விபரங்கள், கிராம அதிகாரிகளிடம் உள்ளன. வீடொன்றில் சிறுவர் ஒருவர் இல்லாமல் போவது பற்றி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அது குறித்து உடனடியாகச் செயற்பட்டு, சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக்கு ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதனை அர்த்தமுள்ளதாக்குவதற்கு, தனியான இராஜாங்க அமைச்சு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் அறநெறிப் பாடசாலைக் கல்விகள், அனைத்துப் சிறுவர்களுக்கும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், சிறுவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்பாதிருப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அனைத்துச் சமயங்களை சேர்ந்த சிறுவர்களையும் அறநெறிப் பாடசாலைகளுக்கு அனுப்புவதன் மூலம் கிடைக்கும் ஆன்மீகப் பண்புகளின் ஊடாக, சிறுவர்களுக்கும் பெற்றோருக்கும் இடையிலான தொடர்பினை பலப்படுத்த முடியும்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கப்பட்டுள்ள சிறுவர்களை அவற்றிலிருந்து மீட்க வேண்டுமென்பதுடன், அவர்கள் அதற்காகத் தூண்டப்படக் கூடிய காரணிகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியமாகும்.

சேவை நிலையங்கள் ரீதியாக, பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து அறிவூட்டுதல், தாய்மார் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள குடும்பங்களின் பிள்ளைகள் குறித்து விசேட கவனம் செலுத்துதல் என்பவற்றை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படக் கூடும் என சந்தேகப்படக்கூடிய சிறுவர்கள் உள்ள குடும்பங்கள் குறித்து முற்கூட்டியே அறிந்துகொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: