தொடர்ந்தும் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் 24 ஆம் திகதி முடக்கப்படும் நாட்டை மீளவும் 27ஆம் திகதி திறக்க முடியாமல் போய்விடும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !

Thursday, April 23rd, 2020

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாளாந்தம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதால் எதிர்வரும் நாட்கள் மிகவும் ஆபத்தான மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

அடுத்தடுத்து பல்வேறு பிரதேசங்களில் இது போன்று நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் 24 ஆம் திகதி முடக்கப்படும் நாட்டை மீளவும் 27ஆம் திகதி திறக்க முடியாமல் போய்விடும் எனவும் சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.

ஆனாலும் தற்போது மேற்கொள்ளப்படும் பரிசோதனை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை;  நாள் ஒன்றுக்கு 1500 பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தால் தற்போதைய ஆபத்தை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சுகாதார பிரிவில் உள்ள சிலரின் செயற்பாடு காரணமாக நாட்டை வழமைக்கு கொண்டுவர இருந்த வாய்ப்பு மேலும் 3 வாரங்களுக்கு தாமதமாகியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் கீழ் மட்டத்தில் இருந்து கொத்தாக நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் நோயாளிகளை கட்டுபடுத்த முடியாமல் போய்விடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் நாட்டின் பல பிரதேசங்களில் கொத்தாக நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். எதிர்வரும் நாட்களில் மேலும் சில பிரதேசங்களில் இவ்வாறு கொத்தாக நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களேயானால் உடனடியாக நாடு முழுவதும் பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: