தரம் ஒன்று மாணவர் அனுமதிக்கு 15 ஆம் திகதி முதல் நேர்முகப் பரீட்சை!

Wednesday, August 8th, 2018

2019 ஆம் கல்வியாண்டிற்காக அரச பாடசாலைகளிலும் உதவி பெறும் பாடசாலைகளிலும் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

2019 ஆம் வருடம் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதித்தல் தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிரூபத்திற்கமைய நேர்முகப் பரீட்சை குழுக்களை நியமிப்பதற்கான ஆலோசனை பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கமைய 2019 ஆம் கல்வியாண்டில் முதலாம் தரத்தில் ஒரு வகுப்பில் 37 மாணவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவர். இவற்றுள் 7 இடங்கள் படை வீரர்களின் பிள்ளைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் பெயர் பட்டியல் செப்ரெம்பர் 15 ஆம் திகதியுடன் பூர்த்தி செய்யப்பட்டு செப்ரெம்பர் 30 ஆம் திகதி அளவில் காட்சிப்படுத்தப்படும் எனவும் கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதித்தல் தொடர்பான விண்ணப்பம் ஜீலை மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நகர பாடசாலைகளை இயன்றளவு குறைத்து அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிக்க பெற்றோர் அறிவூட்டப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: