சேதன பசளை உற்பத்திச் செயல்முறை தொடர்பில் மீளாய்வு – இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவிப்பு!

Thursday, January 27th, 2022

சேதன பசளை உற்பத்தி மற்றும் விநியோகச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அதற்கான பொறிமுறையை சரியாக நடைமுறைப்படுத்துதலுக்கு அவசியமான மாவட்ட மட்டத்திலான தீர்மானங்களை மேற்கொள்வதற்குமான முக்கிய கூட்டமொன்று ராஜகிரியவிலுள்ள பசுமை வியசாய செயல்பாட்டு மையத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் நடைபெற்றுள்ளது.

மேற்படி கலந்துரையாடலின்போது உயிரியல் மற்றும் சேதன பசளை உற்பத்தி வழங்குனர்களால் முன்மொழியப்பட்ட மாவட்ட அடிப்படையினலான செயன்முறைகள் தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்பட்டதோடு, சிறுபோகத்திற்கான வீதி வரைப்படம் தொடர்பிலும் கேள்வி மனு அறிவிப்புக்கள் மற்றும் சிறந்த வகையிலான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் என்பன குறித்தும் ஆராயப்பட்டது.

இதன்போது, சேதன பசளை உற்பத்தியாளர் தங்கள் உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த சிக்கல் தொடர்பில் எடுத்துரைத் திருந்ததோடு, விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி அஜந்த டி சில்வா உயிரியல் மற்றும் சேதன பசளை உற்பத்தியை மேற்கொள்ளும் தரப்புக்களை சரியாக அடையாளம் கண்டமைக்கு நன்றி தெரிவித்திருந்தார்..

இதன்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் இராணுவம் ஒருங்கிணைப்பு முயற்சிகள் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் என ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.

முன்னைய கூட்டங்களில் ஆலோசித்ததை போன்று சிறுபோக உற்பத்தி தொடர்பில் தரை மட்டத்தில் சாத்தியமான முறையில் மேற்கொள்ள வேண்டுமெனில், அவற்றை செயற்படுத்தும் விவசாய மற்றும் கமநல அதிகாரிகளை தெளிவூட்ட வேண்டியது அவசியம் எனவும், 2022 சிறுபோக விளைச்சளுக்காக திட்டமிடப்பட்ட வீதி வரைபடங்களுக்கமைய செயற்படும் பட்சத்தில் சிறந்த பலன்களை காணலாம் என்றும் அதற்காக அதிகாரிகளால் தரைமட்டத்தில் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவோருக்கு தெளிவூட்டப்பட வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்..

மேலும் உற்பத்திச் செயற்பாடுகளின் தரம் மற்றும் அவசியமான தரநிலைகளை பேணுதல் தொடர்பில் முப்படைகளிலும் உள்ள நிபுணர்களினால் விளக்கமளிக்கப்படுதல் வேண்டுமென ஜனாதிபதி எதிர்பார்ப்பதாகவும், சாத்தியமற்றது எதுவுமில்லை என்பதால் தற்போது நாம் இருக்கின்ற நிலைமைகள் தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்கான முன்னோடிக் கள செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சில ஊடகங்கள் இப்பணிகள் சாத்தியமற்றது என்ற விம்பத்தை தோற்றுவிக்க முயற்சிப்பதால் தரை மட்டத்தில் தரமான விளைச்சளை உறுதிப்படுத்தும் வகையில் நாம் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்..

இக்கூட்டத்தில் தற்போதுள்ள நீர்ப்பாசன முறைகள் மற்றும் பல்வேறு வலயங்கள், அந்தந்த பிரதேசங்களின் மண் நிலைமைகள், பயிர்ச்செய்கைக்கான தேவைப்பாடுகள் மற்றும் சிறுபோக விளைச்சளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக பின்பற்றக்கூடிய திட்டமிடல்கள் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டதோடு, அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த நோக்கத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட திட்டமிடலை செயற்படுத்தி வெற்றி காண முடியுமெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: