சகல நெற்காணிகளுக்கும் இலவச பயிர் காப்புறுதி!

Wednesday, July 11th, 2018

நாட்டில் உள்ள சகல நெற் காணிகளுக்கும் உப உணவுப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்தப்படும் காணிகளுக்கும் இலவச பயிர் காப்புறுதிகளை வழங்குவதற்கு கமத்தொழில் அமைச்சு கமநல சேவை மாவட்டக் காரியாலங்களுக்கு அறிவித்துள்ளது.

பயிர் காப்புறுதி சபையால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இவ்வேலைத் திட்டத்திற்கு விவசாயிகளிடமிருந்து எவ்வித காப்புறுதி தவணைப் பணமும் அறவிடப்படமாட்டாது எனவும் இத்திட்டம் எதிர்வரும் பெரும்போகம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அடிக்கடி ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம் காரணமாக விவசாயிகளும் உப உணவுப் பயிர்ச்செய்கையாளர்களும் தொடர்ந்து தொழில் இழப்பையும் நட்டத்தையும் அனுபவித்து வருவதால் நெற் செய்கையில் ஆர்வமற்ற நிலையில் இருந்து வருகின்றனர்.

இயற்கை அழிவு, காட்டு மிருகங்களால் ஏற்படுத்தப்படும் சேதம் என்பவற்றுக்காக விவசாயிகளுக்கு ஹெக்டேயர் ஒன்றுக்கு 40,000 ரூபா வீதம் பயிர் காப்புறுதி சபை மூலம் நட்டஈடு வழங்கவும் கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

விவசாயிகளை நெற் செய்கையில் ஊக்குவிப்பதற்காக உரமானியம், இயற்கைப் பசளை உபயோகிப்போருக்கு இலவச விதை நெல் விநியோகம் உள்ளிட்ட சேவைகளை அரசு வழங்கிவரும் வகையில் இலவச பயிர் காப்புறுதி வழங்கப்படுவது விசேட அம்சமாகும்.

உருளைக்கிழங்கு, வெங்காயம் , மரக்கறிச் செய்கை என்பனவற்றில் ஈடுபடுவோருக்கும் இலவச பயிர்காப்புறுதி வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: