ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Thursday, September 30th, 2021

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை(01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில், பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளைமுதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவையை, தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளைய தினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும், இரண்டு வாரங்கள் வரை எந்தவொரு புகையிரத சேவையையும் முன்னெடுக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு உள் மாத்திரம் பேருந்து சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதனடிப்படையில், ஆசன எண்ணிக்கைக்கு அமைவாகவே பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும் புகையிரதங்களில் போதிய ஆசன வசதிகள் இல்லாததன் காரணமாகவும் அனேகமானவர்கள் நின்று கொண்டே பயணம் செய்வதாலும் புகையிரத சேவையை ஆரம்பிக்கவேண்டாம் எனவும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகளவு பயணிகளை ஏற்றுவதை அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பேருந்துகளில் பயணிகளில் நின்று கொண்டு பயணம் செய்வது அவதானிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: