அரச பணியாளர்கள் தங்களது பொறுப்புக்களை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சரிவர நிறைவேற்ற வேண்டும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Monday, February 21st, 2022

மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பங்களிப்பதே அரச பணியாளர்களாகிய உங்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகும் என்பதை உரிமையுடன் நினைவுபடுத்த விரும்புவதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

நாட்டில் தற்போது உள்ள பல்வேறு சட்டதிட்டங்கள் மற்றும் தடைகள் காரணமாக – பல்வகைப்பட்ட பாதிப்புகளுக்கும் குடிமக்கள் உள்ளாகியுள்ளனர்.

அத்தகைய சட்டங்களைத் தளர்த்தி மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்துவதும் அரச பணியாளர்களின் ஒரு கடமைப் பொறுப்பு ஆகும்

எனவே, உங்களது அறிவை நேரடியாக அரச நிர்வாகத்துடன் தொடர்புபடுத்தி – மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்றக்கூடிய – நடைமுறைக்குச் சாத்தியமான முன்மொழிவுகளை நீங்கள் அரசாங்கத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் நாட்டின் அரச பணியாளர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாகும். அவர்களது உரிமைகள் மற்றும் சலுகைகளுக்காக மக்கள் வழங்கும் வரிப் பணத்திலிருந்தே செலவிடப்படுகின்றது.

அரச வருமானம் முறையாகத் திறைசேரிக்கு கிடைக்குமானால் மட்டுமே, அனைத்து அரச துறையினருக்குமான உரிமைகள் மற்றும் சலுகைகளை உறுதிப்படுத்த முடியும்.

அரசாங்கம் என்ற வகையில் அனைத்து அரச பணியாளர்களின் உரிமைகளையும் நாம் உறுதிப்படுத்திப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அது நியாயமானது; அதில் தவறு ஏதும் இல்லை. அவ்வாறே நாமும் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிச் செயற்பட்டுக்கொண்டே இருக்கின்றோம்.

அதேசமயத்தில், அரச பணியாளர்களும், தங்களது பொறுப்புக்களை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்பதை நான் எதிர்பார்க்கிறேன் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: