அரசியல் நோக்கங்களை ஆதரிப்பவர்களாக அல்லாமல் காலத்துக்கு பொருத்தமான கல்வி முறையை முன்வையுங்கள் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கோரிக்கை!

Friday, July 16th, 2021

கல்விச் சீர்த்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள், தற்காலத்துக்குப் பொருத்தமான ஒரு கல்வி முறையை முன்வைக்க வேண்டுமே அன்றி, அரசியல் நோக்கங்களை ஆதரிக்கின்றவர்களாக இருக்கக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி  செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

புதிய தொழில்நுட்பத்தின் மூலம், தொழில் சந்தையை இலக்காகக் கொண்ட திறமையான பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கத்துடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், பெருநகரப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படவுள்ளன.

க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறுகின்றவர்களில் 80 சதவீதமானவர்கள், பல்கலைக்கழக வாய்ப்பை இழக்கின்றனர்.

அவர்களில், பொருளாதார ரீதியாக வசதியுள்ள மாணவர்கள், தனியார் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர்.

உயர்தரத்தில் சித்தி பெற்றும், ஆனால் பொருளாதார ரீதியாக வசதியில்லாத, திறமையான மாணவர்களுக்கு, தொழில் சந்தைக்கு ஏற்ற பட்டப்படிப்பினை வழங்குவதையே, இந்தப் பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பட்டமொன்றைப் பெற்றுக்கொள்ளும் பல பட்டதாரிகள், அரச தொழிலை எதிர்பார்க்கிறார்கள். எனினும், அரசாங்கத்தின் பொறுப்பானது, தொழில்களை வழங்குவதல்ல. மாறாகத் தொழில்களை உருவாக்கும் ஒரு விரிவான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதேயாகும். நூற்றுக்கு நூறு வீதம் அரச பல்கலைக்கழகங்களை நடத்த முடியாது.

இருப்பினும், தனியார்ப் பல்கலைக்கழகங்களை ஒரு வியாபாரமாக நடத்துவதைத் தான் எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டார். தனியார்ப் பல்கலைக்கழகங்கள் ஈட்டும் வருமானத்தை, கல்வி நடவடிக்கைகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: