அரசியல் கைதிகளின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக விசனம்!

அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் பலர் தற்போதும் சிறைத்தடுப்பில் காணப்படும் நிலையில் அவர்களின் சுதந்திரம் தற்போது பறித்தெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட சிவில் அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ப. செந்தூரன் தெரிவித்தார்
யாழ்ப்பாணம் நல்லூர் கச்சேரி வீதியில் அமைந்துள்ள சாந்தி நிலைய மையத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் சந்திப்பு நேற்று (18) நடைபெற்றது. இதன் போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போது அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் நிலைமைகள் கேள்விக்குறியாக மாறி வருகின்றது. இதற்குப் பதில் வழங்க வேண்டியது தற்போதைய ஆட்சியாளர்களின் கடமை. இது தொடர்பாகக் கரிசனையில்லாமால் தாம் நல்லாட்சி நாடாத்துவதாகத் தெரிவிப்பது எங்களுக்கு எந்தவகையிலும் சாதகமாக அமையாது தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் 350 பேர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுத் தற்போது சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கான வேலைவாய்ப்பு வசதிகள் இன்னமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அதேபோன்று தடுக்க வைக்கப்பட்டுள்ளவர்கள் யாழ்ப்பாணத்தில் 32 பேர்கள் காணப்படுகின்றனர். இவர்களிற்கான சமூக வேலைத்திட்டங்களை முன்னெடுக்காத பட்சத்தில் நாங்கள் மாபெரும் போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கின்றோம். இதற்கென மக்களின் பங்களிப்பு எங்களுக்குத் தேவையாகவிருக்கின்றது.
எமது நாட்டில் சமூக நல்லிணக்கத்தினை எற்படுத்துவது தொடர்பில் நாம் அக்கறை கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட சிவில் அமைப்பின் 04 மாவட்டங்களின் அமைப்பாளர்கள்,முன்னாள் போராளிகள், அரசியற் கைதிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|