மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே நாடாளுமன்றத் தேர்தல் முறையை மறுசீரமைக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளது – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023

கடந்த தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம்தான் நாடாளுமன்றத் தேர்தல் முறையை மறுசீரமைக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்..

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை தேர்தல்முறை மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர் தினேஸ் குணவர்தன,

நாடாளுமன்றத் தேர்தல் முறையை மறுசீரமைத்து கலப்பு தேர்தல்முறையொன்று உருவாக்கப்படும் என்றே மக்கள் ஆணையை கடந்த தேர்தலில் பெற்றோம்.

அதனை எமது அரசாங்கத்தின் தலைவர்கள் பலமுறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதேபோன்று வரவு-செலவுத்திட்டங்களுக்கான அனுமதிகளை பெறும் போது கூறியுள்ளோம்.

தேர்தல் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் தொடர்பில் இரண்டு தரப்பினரும் பாராளுமன்றில் கருத்துகளை பகிர்ந்துள்ளோம்.

அதன் பிரகாரம் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை மாற்றும் கலப்பு தேர்தல் முறை பற்றிய யோசனையொன்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடல்கள் நடாத்திய பின்னர் மீண்டும் யோசனைகளை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் இன்று நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் கலந்துரையாடல் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். ஆனால், இந்த விடயம் தொடர்பில் சந்தேகம் கொள்ளாது கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

சந்தேகங்கள் கொண்டு அரசியல் மாற்றங்களை செய்ய முடியாது. 20 மற்றும் 22 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பலமுறை கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுதான் அவை நிறைவேற்றப்பட்டன. ஆகவே, வெளிப்படைத்தன்மையுடன்தான் நாம் இந்தப் பணிகளை முன்னெடுக்கிறோம்.

தேர்தல்முறையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்த்துள்ளனர். சில பிரதேசங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இல்லாதுள்ளார். இதனால் இந்தப் பணியை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: