பிம்ஸ்டெக் அமைப்பின் 24 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி.

Monday, June 7th, 2021

“பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா (பிம்ஸ்டெக்) முன்னெடுப்பின் 24 ஆவது ஆண்டு விழாவின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் தெரிவிக்கக் கிடைத்ததையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க முன்முயற்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.

பிம்ஸ்டெக் அமைப்பின் தற்போதைய தலைவர் என்ற வகையில், இலங்கை, 5 ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் நிறைவேற்றும் நோக்கத்துடன், பிம்ஸ்டெக் சாசனம், பிம்ஸ்டெக் துறைகள் மற்றும் உப துறைகளின் சீரமைப்பு, பிம்ஸ்டெக் இராஜதந்திர கல்விக்கூடங்கள் / பயிற்சி நிறுவனங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பவற்றை உறுப்பு நாடுகள் கூட்டாக இறுதி செய்த, 17ஆவது பிம்ஸ்டெக் அமைச்சரவைக் கூட்டம் உட்பட எட்டு முக்கிய பிம்ஸ்டெக் கூட்டங்களை கூட்டியது.

பிம்ஸ்டெக் செயலகம், இந்த பெறுபேற்றினை அடைந்துகொள்வதற்கு, பிம்ஸ்டெக் சட்டகத்தின் கீழ் பாராட்டத்தக்க வகையில் ஆதரவளித்து, வசதிகளை செய்தது. கொவிட் -19 பெருந்தொற்றுப் பரவல் தணிந்து, உறுப்பு நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலைமைகளுக்கு அமைய, இவ்வருட பிற்பகுதியில் 5ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டுக்கான உபசரிப்பு ஏற்பாடுகள் குறித்து இலங்கை கவனம் செலுத்தி வருகின்றது என்பதை நான் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

பிம்ஸ்டெக் அமைப்பு, உலக சனத்தொகையில் 22 சதவிகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்திய போதும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் மட்டுமே இவ்வமைப்பு பங்களிப்புச் செய்கிறது. எனவே, பிராந்தியத்தின் சவால்களை வெற்றிகொள்வதற்காக, உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை சிறந்த முறையில் பேணவும், பகிர்ந்த முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், உறுப்பு நாடுகளை நான் பலமாக ஊக்குவிக்கிறேன்.

கடந்த காலங்களைப் போலவே, அனைத்து பிம்ஸ்டெக் முயற்சிகளுக்கும் இலங்கை முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளது என நான் உறுதியளிக்கிறேன்.

எமது மக்களுக்காக பகிரப்பட்ட சுபீட்சத்தையும் அமைதியையும் அடைந்துகொள்வதற்கு, அனைத்து பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளும் இணக்கமாகச் செயற்படுவோம்.”

Related posts: