சுயலாப அரசியல்வாதிகளுக்கு உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் மகிழ்ச்சியே – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, May 24th, 2019


இலங்கையின் இன்றைய நிலையில் மக்கள் தங்களது நாளாந்த வாழ்க்கையை மேற்கொள்வதற்கான ஜீவனோபாயத்திற்காக எதை செய்வது என்ற நிலை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். எனவே, அதற்குரிய வசதி வாய்ப்புகளை ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் செய்து கொடுக்க வேண்டியது அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நலிந்து போன மக்களின் நாளாந்த அவலங்கள் குறித்து தமிழ் கட்சி தலைமைகளில் பலருக்கும் அக்கறை இல்லாமால் இருக்கலாம். யாருக்கும் இல்லாத அக்கறை எனக்கு மட்டும் இருப்பது ஏன் என்று கேட்பீர்கள்!. அன்று எரிந்து போன எம் தேசத்தில் நலிந்து போன எமது மக்களுடன் கூடவே வாழ்ந்தவன் நான். அழிவு யுத்தத்தின் போது வலிகளையும் வதைகளையும் சுமந்த எமது மக்களின் அவலங்களை துடைத்த அனுபவங்களால்,.. நானே அந்த பாதிப்புகளின் வலிகளை உணர்ந்த வரலாறு எனக்கு உண்டு.

இனியுமொரு வன்முறையும் அதன் வலிகளும் எமது மக்களை வந்து சூழும் கொடுமைகளை நாம் சகித்துக்கொண்டிருக்க முடியாது. போராட்டம் வெடிக்கும் என்று சும்மா போலியாக உசுப்பேற்றி சூளுரைக்கும் சுயலாப பல தமிழ் அரசியல்வாதிகளுக்கு உயிர்த்த ஞாயிறு வன்முறைகள் நிச்சயமாக இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.

குண்டு வெடிப்புகள் நடந்த குருதியின் ஈரம் காயுமுன்னரே அவர்கள் விடுத்த அறிக்கையில் நடந்த வன்முறைகளால் அரசியல் தீர்வு முயற்சிகள் பாதிப்படைந்து விட்டன என்றும், அரசியல் தீர்வை பேரம் பேசி பெற முடிந்த போதிய அரசியல் பலம் அவர்களிடம் இருந்தும், அதை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்காத அவர்களின் குற்றமா?. அல்லது, அதனோடு சம்பந்தமே இல்லாத குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரிகளின் குற்றமா?… படையினரை வெளியேற்றியே தீருவோம் எனச் சூழுரைத்து தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்கள்.  அது அவர்களின் குற்றமா?.. அல்லது குண்டு வெடிப்புகள் நடந்தவுடன் படையினர் எம் மண்ணில் இருந்து வெளியேறக்கூடாது என்று அவர்களே கூறி வரும் அவர்களது சந்தர்ப்பவாத அரசியல் தனத்தின் குற்றமா?..

சொந்த மக்களின் பெயரை சொல்லி சுயலாப அரசியல் நடத்துவோர் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவார்கள். அரசியல் தீர்வை பெற்று தருவோம்,. படையினரை வெளியேற்றுவோம் அது செய்வோம்… இது செய்வோம் என்று,… தம்மால் அவைகள் முடியாததைக் கூறி அம்பலப்பட்டவுடன் அதற்கான போலி நியாயங்களை அவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள். உயிர்த்த ஞாயிறு வன்முறைகள், தமிழரின் உரிமைகளை பெற்றுத்தருவோம் என கூச்சலிடுவோருக்குத் தப்பித்து கொள்ளும் காரணங்களில் ஒன்றாகவே அமைந்து விட்டது…

கடந்த ஏப்பரல் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலின் பின்னரான பல்துறை சார்ந்த வீழ்ச்சி நிலையின் காரணத்தால், வாழ்வாதாரங்கள் இழந்து தவிக்கின்ற அனைத்து மக்களினதும் பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கென உடனடியாக ஓர் அவசரகால பணியகம் அமைக்கப்பட வேண்டும்.

அப் பணியகம் ஊடாக மக்களின் பாதிப்புகள் தொடர்பில் ஆராய்ந்து அம் மக்களின் இழப்புகளுக்கு ஏற்ப இழப்பீடுகளை வழங்குவதற்கு இந்த அரசு முன்வர வேண்டியது உடனடி அவசியமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அதாவது, தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக உயிரிழந்தோருக்கும், காயமடைந்தோருக்கும், அதன் பின்னரான வன்முறைத் தாக்குதல்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டோருக்கும் போன்றே இதனால் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தொழில்வாய்ப்புகளைக் கொண்டிருந்த அனைவருக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டிய தேவையை இங்கு வலியுறுத்துனின்றேன்.

Related posts:

தோழர் விக்னராஜா வேதநாயகத்தின் புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாத...
சக அரசியல் கட்சிகளை நான் விமர்சிப்பதென்பது காழ்ப்பு ணர்ச்சி காரணமாக அல்ல: அவர்கள் வரலாற்றில் விட்ட த...
கிளிநொச்சியில் நாளை விசேட கூட்டம் - வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆராய அமைச்சர...