பயனற்ற திட்டங்களால் பயனேதும் கிடையாது – டக்ளஸ் தேவானந்தா எம்பி சுட்டிக்காட்டு!

Friday, July 20th, 2018

இந்த நாட்டை முன்னேற்றப் போவதாகக் கூறிக்கொண்டு,  பல்வேறு திட்டங்களைக் கொண்டு வரப்படுகின்றன. அத்திட்டங்கள் எந்தளவிற்கு சாத்தியமாகுமோ என்பது கேள்விக்குறிகளாக இருந்தாலும், இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மோசடிகளை ஒழிக்காமல் நீங்கள் எவ்விதமான திட்டங்களைக் கொண்டு வந்தாலும் அவற்றினால் இந்த நாட்டிற்கோ, இந்த நாட்டு மக்களுக்கோ எவ்விதமான பயன்களையும் கொண்டுதரப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற இலஞ்சம ஊழல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த நாட்டில் குப்பை மேடுகளை அகற்றுகின்ற பணிகளில் ஈடுபடுவோர் முதற்கொண்டு ஜனாதிபதி செயலகத்தில் உயர் பதவிகளை வகிப்போர் வரையில் இலஞ்சம், ஊழல், மோசடி குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இந்த இலஞ்சம், ஊழல்கள் என்பன ஏற்படுவதற்கு ஏதுவாகவுள்ள இந்த நாட்டின் புற காரணிகள் தொடர்பிலும் நீங்கள் அவதானம் செலுத்த வேண்டும்.

வறுமை நிலை. இந்த நாட்டில் கிட்டத்தட்ட 19 மாவட்டங்கள் வறுமை நிலையில் தொடர்ந்து இருந்து வருகின்றன. இத்தகைய வறுமை நிலையை அகற்றி, எமது மக்களது பொருளாதார நிலையினை மேம்படுத்துவதற்கு இதுவரையில்  எவ்விதமான திட்டங்களும் இல்லை. இப்போது, ‘கிராமப் பிறழ்வு” – ‘கம் பெரலிய’ – திட்டம் பற்றி பேசப்படுகின்றது. சுய தொழில் ஊக்குவிப்பு பற்றிப் பேசப்படுகின்றது. ‘தொழில் முயற்சி இலங்கை’ – ‘என்டர்பிரசஸ் ஸ்ரீ லங்கா’ பற்றி பேசப்படுகின்றது  இந்த நாட்டிற்கு ஊசி முதல் ஊதுவர்த்தி வரையில் இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில், எமது மக்களால் சுய தொழிலாக எதை உற்பத்தி செய்து, யாருக்கு விற்பது? என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி அதிகரிக்கின்ற பொருட்களின் விலைகள், வரிகள், தண்டப் பணங்கள் போன்றவற்றுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் அரச ஊழியர்களது ஊதிய மட்டங்களை அதிகரிக்கப்படாதுள்ளது. அதிகரித்த அரச பணியாளர்களை வைத்துக் கொண்டு, அவர்களுக்கான பணிகளை பிரித்து ஒதுக்க இயலாத நிலைமைகளும் – பணியாளர்களுக்கான பணிகள் இல்லாத நிலைமைகளும் காணப்படுகின்றன.

வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில் பலர் தங்களது மனித வளங்களை வீணாக்கிக் கொண்டு இருக்கின்றனர். எத்தனை இலட்சம் பேருக்கு நீங்கள் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறினீர்களோ – அத்தனை இலட்சம் பேரைவிட பல மடங்கு மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி, விரக்கதி நிலையில் காணப்படுகின்றனர்.

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதாரத்துறை அமைப்புகள் சார்ந்த  ஆளணி நியமனங்களில் – பொது ஆட்சேர்ப்பு முறைமையில் வெளிப்படைத் தன்மை இல்லாமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. மருத்துவமனையில் இறப்பதற்கும்கூட இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.

அரச சேவை துறைகளில், அமைப்புகளில் பொறுப்பு கூறும் குறைபாடுகளைக் காணக்கூடிய நிலைமைகள் உருவாக்கம் பெற்று, நீடிக்கின்றன. ஒரு நபர் அரச துறைகள் சார்ந்து தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் பல்வேறு இடர்பாடுகளுக்கும், காலதாமதங்களுக்கும் முகங்கொடுக்க நேரிடுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


உள்ளுராட்சி மன்றங்கள் தரமுயர்ந்தது! எமது கோரிக்கை நிறைவேறியது!! வடக்கில் 3000பேருக்கு அரச வேலைவாப்பு...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயாரது புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ்...
பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் - அமைச்சர் ...