எமது கடல் வள பாதுகாப்பு , தொழிலாளர்களின் வாழ்வு மேம்பாட்டுக்காகவே – புதிய சட்டத் திருத்தம் – மாற்றுத்தரப்பின் கருத்துக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் விளக்கம்!

Friday, November 24th, 2023


~~~~~~~
கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி உருவாக்கப்படும் சட்ட. திருத்தத்திற்கான வரைபை அரசியல் நோக்கங்களுக்காக சில சக்திகள் தவறாக சித்தரிக்க முற்படுவதாக கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகளுக்கு  கடற்றொழில் திருத்த வரைபு தொடர்பாக விளக்கமளிக்கும் சந்திப்பு பூநகரி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 21 ஆம் திகதி சர்வதேச கடற்றொழிலாளர்  தினத்தை முன்னிட்டு சில மாற்று தரப்பினரால் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இத்திருத்த வரைபை ஆட்சேபித்து முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்தில் எடுத்து உரையாற்றிய அமைச்சர் அவர்கள் மேலும் தனது உரையில்,

“வேறு நாட்டு கப்பல்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க  இந்த  திருத்த வரைபு இடமளிப்பதாக சில தவறான கருத்துக்களை உள்நோக்கத்துடன் சில சக்திகள் பிரசாரம் செய்ய முற்படுகின்றன.

1979 இல் உருவாக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான சட்டத்தில்  இலங்கை கடற்பரப்புக்குள்  வெளிநாட்டு கப்பல்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே உள்ளன என்பதை இவர்கள் அறிந்திருக்க வில்லை போலும்.

எந்த சந்தர்ப்பத்திலும் எமது மக்களின் கடல்வளங்களை  எந்த வெளிச்சக்திகளும் சூறையாடுவதற்கு நான்  அனுமதிக்கப் போவதில்லை என்பதை நீங்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த திருத்த வரைபில் கூறப்பட்டுள்ள விடயங்களை வரிக்கு வரி ஆராய்ந்த பின்னரே இதில் நான் கையொப்பமிடுவேன்.

எமது கடல் வளங்கள் எமது மக்களுக்கே சொந்தம் என்பதில் நான் எப்போதும் உறுதியுடன் இருப்பேன்.

அதனையிட்டு நீங்கள் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் கடற்றொழில் திணைக்களம் மற்றும் நெக்டா நிறுவன பணிப்பாளர்கள், பூநகரி பிரதேச செயலாளர், கண்டாவளை, பூநகரி, பளை கடற்றொழில் சமாச மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts:

வீட்டுத் திட்டத்திலும் விரும்பாத சர்வதேச சர்ச்சை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!
இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரதே...
யாழ் - கிளிநொச்சி காணிகளை விடுவிப்பது தொடர்பில் புதிய நகர்வு - அமைச்சர் டக்ளஸ் ஏற்பாட்டில் நாடாளுமன்...

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நியமனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் – செயலாளர் நாயகம் டக...
கடற்றொழிலாளர்கள் போக்குவரத்தில் ஈடுபடுபடுவதற்கு விசேட பாஸ் நடைமுற - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக...
தீவகத்தில் நீர் வேளாண்மை ஊக்குவிப்பு திட்டம் - தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட காசோலைகளை ...